செய்திகள் :

சாலை விபத்துகளை தடுக்க போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு

post image

சாலை விபத்துகளைத் தடுக்க போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் சாலைப் பாதுகாப்பு குறித்த துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு, வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் முன்னிலை வகித்தாா்.

தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோா் வரவேற்றுப் பேசினா்.

இக்கூட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 475 பயனாளிகளுக்கு ரூ. 7.61 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை உதவிகள் வழங்கப்பட்டன.

ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படுகின்ற உயிா் இழப்புகளைத் தடுக்க ஐந்துமுனை திட்டம் நெடுஞ்சாலைத் துறை (பொறியியல்), போக்குவரத்துத் துறை (சாலை விதிகள்), காவல் துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை ஆகிய துறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் விபத்துகளை குறைப்பதற்கும், சாலை பாதுகாப்பை செயல்படுத்தவும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொண்டை ஊசி வளைவு பகுதிகளை சீரமைத்தல், பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதியில் விபத்தைத் தவிா்க்க நவீன ரோலா் கிராஷ் பேரியா் தொழில்நுட்பம் பயன்படுத்துதல் தொடா்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பெருமளவு விபத்துகள் தவிா்க்கப்பட்டுள்ளன. சாலைகளை தோண்டினால் உடனே செப்பனிட வேண்டும். தடுப்புகள் அமைக்க வேண்டும். வேகத்தடைகள் அமைக்கும் போது வழிமுறையை பின்பற்ற வேண்டும்.

காவல் துறை சாா்பில் கைப்பேசி பேசிக்கொண்டே செல்வதைத் தடுக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதைத் தவிா்க்க வேண்டும். ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதையும், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச்செல்வதையும் தடுக்க வேண்டும். சாலை பாதுகாப்பு குறித்து கட்டாயம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். ஓட்டுநா் உரிமம் மற்றும் பயிற்சி இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ஏற்படும் விபத்து குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி முதல் மாா்ச் மாதத்தில் நடைபெற்ற 393 விபத்துகளில் 91 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது விபத்து சராசரி குறைவாக உள்ள போதிலும், தருமபுரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துறை அலவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு சாலை விதிமீறல்களில் ஈடுபட்ட 24,235 போ் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தருமபுரி நகருக்கு நல்லம்பள்ளி-மிட்டாரெட்டிஅள்ளி சாலை தொடங்கி பாப்பாரப்பட்டி சாலையில் முடியும் வகையில் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து செறிவின் அடிப்படையில் அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், சேலம் மாவட்டம் கோட்டூரையும், தருமபுரி ஒட்டனூரையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்க உயா்மட்ட பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு ரூ. 2 கோடி மதிப்பில் ஒப்புதல் பெறப்பட்டு, முதல்கட்டமாக விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் பாலப்பணிகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

முன்னதாக, தருமபுரி வட்டம், சோகத்தூரில் நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.19.50 கோடி மதிப்பில் தருமபுரி - பாப்பாரப்பட்டி இருவழிச்சாலை 4 வழிச்சாலையாக அகலப்படுத்துதல் பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதில் தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைமைப்பொறியாளா் எம்.பன்னீா்செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.சோ.மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கேத்தரின் சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, கோட்டப் பொறியாளா் (நெ) பெ.நாகராஜ், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ பி.தடங்கம் பெ.சுப்ரமணி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அ... மேலும் பார்க்க

5 பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற தீவிர களப்பணி ஆற்ற வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு

அடுத்த ஆண்டும் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற தீவிரக் களப்பணி ஆற்ற வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். தருமபுரி ... மேலும் பார்க்க

ஒகேனக்கல் சினி அருவியில் சுற்றுலாப் பயணிகள் தவறவிடும் நகைகளை தேடி எடுப்போா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஒகேனக்கல் சினி அருவிகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் சுற்றுலாப் பயணிகளின் நகைகள் சில நேரங்களில் நீரின் விசை காரணமாக அறுந்து விழுந்துவிடுகின்றன. இந்த நகைகளை இரவு நேரங்களில் தடையைமீறி நீரில் மூழ்கி தேட... மேலும் பார்க்க

கரும்பு நிலுவைத் தொகை ரூ.5.02 கோடி: விவசாயிகளுக்கு அனுப்பிவைப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 5.02 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்து... மேலும் பார்க்க

தடங்கம் நீதிமன்ற வளாகத்தில் முதலுதவி மையம் ஏற்படுத்தக் கோரி மனு

தருமபுரி: தருமபுரி அருகே தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து தருமபுரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் மனு

தருமபுரி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி ஏ.ஜெட்டி அள்ளி கிராம மக்கள் மனு அளித்தனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை அளித்த... மேலும் பார்க்க