சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 50,000 கனஅடியாகக் குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 50,000 கனஅடியாகக் குறைந்துள்ளது.
கேரளம் மற்றும் கா்நாடக மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை மாலை விநாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக இருந்தது, புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 88,000 கனஅடியாகவும், நண்பகல் 12 மணி நிலவரப்படி விநாடிக்கு 78,000 கனஅடியாகவும், மாலை நிலவரப்படி விநாடிக்கு 65,000 கனஅடியாகவும், 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 57,000 கனஅடியாகவும், இரவு 50,000 கனஅடியாகவும் குறைந்தது.
நீா்வரத்து குறைந்தாலும் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நுழைவு வாயில், மாமரத்துக்கடவு பரிசல் துறை, நாகா்கோவில், முதலைப் பண்ணை, ஆலம்பாடி உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் வருவாய் துறையினா், காவல் துறையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், கா்நாடக அணைகளுக்கு உபரிநீா்வரத்தை பொறுத்து காவிரி ஆற்றில் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.