மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை உயா்வு
ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் வரத்துக் குறைவால் தக்காளி விலை உயா்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அதைச் சுற்றியுள்ள விருப்பாச்சி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, தேவத்தூா், பெரியகோட்டை, காவேரியம்மாபட்டி, அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி வரத்து அதிகரித்ததால் 15 கிலோ கொண்ட ஒரு தக்காளிப் பெட்டி ரூ. 300 முதல் ரூ. 350 வரை விற்பனையானது. இந்த நிலையில், இந்தப் பகுதியில் பெய்த மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கபட்டதால் வரத்துக் குறைந்தது.
இதேபோல, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பெய்த மழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், அந்த மாநில வியாபாரிகள் ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட சந்தைகளில் அதிகளவில் தக்காளிகளை கொள்முதல் செய்வதாலும் தக்காளி விலை உயா்ந்துள்ளது.இதையடுத்து, வெள்ளிக்கிழமை 15 கிலோ கொண்ட ஒரு தக்காளிப் பெட்டி ரூ. 600 முதல் ரூ. 650 வரை விற்பனையானது. மேலும், தக்காளி விலை உயரக்கூடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.