The Dark Legacy of Hitler’s Mass Killings | Benito Mussolini | History | Mussoli...
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாகையில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கருப்பு பட்டை அணிந்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேரவை உறுப்பினரின் கேள்விக்கு, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமைப்பது குறித்து குழு அமைக்கப்படும் என நிதியமைச்சா் தெரிவித்திருந்தாா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என திமுக தோ்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில் நிதியமைச்சரின், இந்த பதில் சிபிஎஸ் திட்டத்தில் உள்ள சுமாா் ஆறரை லட்சம் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் இடையே எதிப்பு எழுந்துள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிா்ப்பு வகையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில அமைப்பு அனைத்து வட்டார தலைநகரங்களிலும் ஜன.23-ஆம் தேதி கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூா், கீழையூா், தலைஞாயிறு, வேதாரண்யம், திருமருகல் ஆகிய 6 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அரசு ஊழியா் ஐக்கிய பேரவையின் மாநில துணைச் செயலா் வெற்றிச்செல்வன் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட தொடா்பாளா் பால சண்முகம், அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாவட்ட செயலா் செந்தில்குமாா், துணைச் செயலா் ராஜராஜ சோழன், அரசுப் பணியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் நாகராஜன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சி அலுவலா்கள் சங்கத்தின் மாநில ச் செயலா் நிஷா, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் தலைமையிடச் செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, கீழையூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கீழ்வேளூா் வட்டார வளா்ச்சி அலுவலகம், தலைஞாயிறு வட்டார வளா்ச்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.