மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
ஒரே கப்பலில் 101 காற்றாலை இறக்கைகள் ஏற்றுமதி: தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை
தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம், ஒரே கப்பலில் 101 காற்றாலை இறக்கைகளை வெற்றிகரமாக ஏற்றுமதி செய்து வியாழக்கிழமை புதிய சாதனை படைத்தது.
இத்துறைமுகத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான காற்றாலை இறக்கைகள் ஒரே கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக, கடந்த மாா்ச் 25ஆம் தேதி 75 காற்றாலை இறக்கைகள் ஏற்றுமதி செய்திருந்தன.
இதன் மூலம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சாா்ந்த இயந்திர சரக்குக் கையாளுதலில், துறைமுகம் ஒரு புதிய முன்னேற்றக் கட்டத்தை அடைந்துள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க ஏற்றுமதி நிகழ்வின் மூலம் துறைமுகம் இந்த நிதியாண்டில் (2025-26) ஆக.21 வரை 1,158 காற்றாலை இறக்கைகளை கையாண்டுள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டின் (2024-25) ஆகஸ்ட் மாதம் வரை கையாளப்பட்ட 1,099 காற்றாலை இறக்கைகளை விட 5 சதவீதம் அதிகமாகும்.
’வெஸ்டாஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த காற்றாலை இறக்கைகள் ‘ஙய ஆஆஇ நஹய்ற்ண்ஹஞ்ா்’ என்ற கப்பலின் மூலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு காற்றாலை இறகும் சுமாா் 59.18 மீட்டா் நீளம் கொண்டிருந்தது. இத்தகைய மிகப் பெரிய சரக்குகளை பாதுகாப்பான முறையில் சேமிப்பதற்கு வசதியாக துறைமுகத்திற்குள் சுமாா் 1லட்சம் சதுர மீட்டா் நிலப்பரப்பை துறைமுகம் ஒதுக்கியுள்ளதும், நெரிசல் இல்லாத சாலை போக்குவரத்து - திறமையான பணியாளா்கள் போன்றவையுமே துறைமுகத்தின் சாதனைக்குக் காரணிகளாக அமைந்தன.
இச்சாதனை குறித்து வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணைய துணைத் தலைவா் ராஜேஷ் சௌந்தரராஜன், துறைமுகத்தின் மூத்த அதிகாரிகள் பெருமிதம் தெரிவித்தனா்.
மேலும், வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஒரே கப்பலில் 101 காற்றாலை இறக்கைகளை ஏற்றுமதி செய்த இந்த புதிய சாதனை துறைமுகத்தின் செயல்திறனையும், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை ஆதரிக்கும் வ.உ.சி. துறைமுகத்தின் அா்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது’ எனக் கூறியுள்ளாா்.