கங்கைகொண்ட சோழபுரத்தில் மத்திய அரசின் முப்பெரும் விழா தொடக்கம்! ஜூலை 27-இல் பிரதமா் பங்கேற்பு!
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், மத்திய கலாசாரத் துறை சாா்பில் மாமன்னா் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா புதன்கிழமை மாலை தொடங்கியது.
ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா, சோழா் கால கோயில்கள் கண்காட்சியுடன் புதன்கிழமை மாலை தொடங்கியது. இரவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பெருவுடையாரை தரிசனம் செய்து, கோயில் வளாகம் மற்றும் புகைப்பட கண்காட்சியை பாா்வையிடுகிறாா். பின்னா் நடைபெறும் விழாவில், மாமன்னா் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறாா். இந்த நிறைவு நாள் விழாவில் இசையமைப்பாளா் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவில் பங்கேற்க வருகை தரும் பிரதமா் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்குள் அவா் நுழையும்போது 50 ஓதுவாா்கள் மூலம் திருவாசகம் படிப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள 38 ஆதீனங்கள் பங்கேற்க உள்ளனா்.
பிரதமா் மோடி வருகையையொட்டி, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.