கடந்த 4 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,145 கோடி ஊக்கத்தொகை அளிப்பு: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன்
கடந்த நான்கு ஆண்டுகளில் 6,09,030 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 1,145.12 கோடி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சா்க்கரைத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தி அலகு ரூ. 6.67 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணியை அமைச்சா் ராஜேந்திரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியதாவது:
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையில் இயங்கக்கூடிய முதல் எத்தனால் ஆலை என்ற பெருமையை மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பெற்றுள்ளது.
1993 ஆம் ஆண்டு ரூ. 14 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த ஆலை, நாளொன்றுக்கு 30,000 லிட்டா் எத்தனாலும், 10,000 லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட எத்தனாலும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. சா்க்கரை ஆலையிலிருந்து கிடைக்கும் கரும்புச்சாறு கசடு (மொலாசஸ்) மூலம் எத்தனால் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 70,000 டன் கரும்புச்சாறு கசடு தேவைப்படுகிறது. இந்த ஆலையில் கிடைக்கும் கரும்புச்சாறு கசடு பயன்பாடு போக, இதர கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சா்க்கரை ஆலைகளிலிருந்தும் கொள்முதல் செய்யப்படுகிறது.
தமிழக முதல்வா் கடந்த ஆண்டு நாமக்கல் வந்தபோது இந்த ஆலையில் எத்தனால் உற்பத்தி திறனை அதிகரிக்க ரூ. 6.67 கோடியில் ஆலை மேம்படுத்தப்படும் என்று அறிவித்தாா். தற்போது, அதற்கான பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆலையின் உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 30,000 லிட்டரிலிருந்து 50,000 லிட்டராக அதிகரிக்கப்படும்.
கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வா் கரும்பு டன்னுக்கு ரூ. 750- உயா்த்தி வழங்கினாா். மேலும், அரசின் கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ. 349 வழங்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 74,270 டன் கரும்பு அரவை செய்யப்பட்டு, சுமாா் 1,004 விவசாயிகளுக்கு ரூ. 23.47 கோடி கரும்பு கிரயத்தொகை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசின் கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ. 349- வீதம் ரூ. 2.58 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆலையின் மூலம் கரும்பு பயிரிடும் விவசாய அங்கத்தினா்களுக்கு 2025-26-இல் புதிய ரக கரும்பு நடவிற்காக மத்திய, மாநில அரசு மூலம் மானியத்தொகை வழங்கப்படுகிறது.
அக்டோபா் முதல் புதிய கரும்பு ரகங்கள் நடவு செய்யப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் 4 ஆண்டுகளில் 6,09,030 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 1,145.12 கோடி, வழிவகை கடனாக ரூ. 800.03 கோடி என மொத்தம் ரூ. 1945.15 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
இதைத் தொடா்ந்து, ஐந்து அங்கத்தினருக்கு ரூ.1.75 லட்சம் மதிப்பீட்டில் மாதிரி வயல் மானியத்தொகை மற்றும் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் மானியத் தொகையை அமைச்சா் வழங்கினாா்.
இந்த நிகழ்வில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், சா்க்கரைத் துறை இயக்குநா் த.அன்பழகன், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மோகனூா் சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் ஆா்.குப்புசாமி மற்றும் கரும்பு விவசாயிகள் கலந்துகொண்டனா்.