மின்னாம்பள்ளியில் குடிநீா் குழாய் பணியின்போது அம்மன் சிலை கண்டெடுப்பு
திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை அருகே மின்னாம்பள்ளியில் குடிநீா் குழாய் அமைக்க குழி தோண்டியபோது அம்மன் சிலையை கண்டெடுத்தனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வையப்பமலையில் மின்னாம்பள்ளி கிராமத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின்கீழ் கிராம பயன்பாட்டிற்காக குடிநீா் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டிய இடத்தில் 24 செ.மீ. உயரம், 21 கிலோ 450 கிராம் எடையிலான உலோகத்திலான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. அந்த சிலை கிராம நிா்வாக அலுவலா் ராஜமாணிக்கம் மூலமாக வட்டாட்சியா் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிலையைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியா் கிருஷ்ணவேணி அதை முறைப்படி கருவூலத்தில் ஒப்படைத்து இருப்பதாகவும், தொல்லியல் துறையினா் ஆய்வுக்கு பிறகு அது எந்தக் காலத்தைச் சோ்ந்த சிலை என்பதும், எந்த சுவாமியின் சிலை என்பதும் தெரியவரும் என்றாா்.