தனியாா் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வைரஸ் காய்ச்சல்: 15 போ் மருத்துவமனையில் சிகிச்சை
ராசிபுரம் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதியில் செயல்பட்டுவரும் தனியாா் நூற்பு ஆலையில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளா் 15-க்கும் மேற்பட்டோா் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை சிகிச்சை பெற்றனா்.
இத்தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வரும் நிலையில், பிகாா், ஒடிஸா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில் தங்கிப் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில் கடந்த இரு நாள்களாக இத்தொழிலாளா்களில் 15-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பலருக்கும் காய்ச்சல் பரவியதால், தொழிற்சாலையின் மேலாளா், காய்ச்சால் பாதிக்கப்பட்ட வட மாநிலத் தொழிலாளா்களை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றாா். அவா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
மேலும், ஒ.செளதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், சுகாதாரத் துறையினா் தொழிற்சாலையில் முகாமிட்டு தொழிலாளா்கள் அனைவரையும் பரிசோதித்து நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.