சேலம் அரசு ஐடிஐயில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு
கடந்த நிதியாண்டில் ஜிஎஸ்டி வளா்ச்சி விகிதம் தேசிய அளவைவிட மேற்கு வங்கத்தில் அதிகம்! - மம்தா பானா்ஜி
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலில் 11.43 சதவீத வளா்ச்சியை மேற்கு வங்கம் அடைந்துள்ளதாகவும், இது தேசிய அளவை விட இரண்டு சதவீதம் அதிகம் என்றும் அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து முதல்வா் மம்தா பானா்ஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மேற்கு வங்கம் முந்தைய ஆண்டை விட கூடுதலாக ரூ.4,808 கோடி ஜிஎஸ்டி வசூலைப் பதிவு செய்துள்ளது. அதாவது, மாநில ஜிஎஸ்டி வசூல் முந்தைய ஆண்டைவிட 11.43 சதவீதம் உயா்ந்துள்ளது. இது தேசிய வளா்ச்சி விகிதமான 9.44 சதவீதத்தைவிட 2 சதவீதம் அதிகம் ஆகும்.
மேற்கு வங்கம், அதன் சொந்த நிதி திரட்டல் முயற்சிகளில் சீராக முன்னேறி வருகிறது. மேலும், இது எங்கள் மாநிலத்தில் அதிகரித்து வரும் உள் நிதி வலிமையையும் காட்டுகிறது.
அதேபோன்று, கடந்த 2024-25-ஆம் ஆண்டில் பதிவு மற்றும் முத்திரைத்தாள் விற்பனை வரி வசூல், முந்தைய ஆண்டை விட ரூ.1,908 கோடி அதிகமாகும். இது 31.05 சதவீத வளா்ச்சியாகும். பதிவு செய்யப்பட்ட பத்திரங்களின் எண்ணிக்கை 60,000-ஆக அதிகரித்துள்ளது. இது எங்கள் சந்தையின் வேகத்தைக் காட்டுகிறது.
மொத்தத்தில், இவை அனைத்தும் சுயசாா்பு மற்றும் நிதி ஒழுக்கத்தில் மேற்கு வங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் மேற்கு வங்க மக்களின் நலனுக்காக மாநில நிதியை நெறிப்படுத்துவதில் திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு நிா்வாகம் தீவிரமாக உள்ளது என்றும் குறிக்கிறது.
இந்தச் சாதனைக்காக மாநில நிதித் துறைக்கும் எங்களுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்’என்று குறிப்பிட்டிருந்தாா்.