கடலூா் சிப்காட் தொழிற்சாலை விபத்து: அமைச்சா் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
கடலூா், சிப்காட் பகுதியில் இயங்கிவரும் கிரிம்ஸன் ஆா்கானிக் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்களுடன் அமைச்சா் ஆலோசித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய துறை அலுவலா்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தொடா்ச்சியாக குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு மேற்கொண்டு, இது போன்ற விபத்துகள் தொடா்ந்து நடைபெறாத வண்ணம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அலுவலா்களுக்கு ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், பணியில் கவனக்குறைவாக செயல் பட்டதற்காகவும் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் செந்தில்விநாயகம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் தமிழ்ஒளி ஆகியோா் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
இது போன்ற விபத்துகள் இனிவரும் காலங்களில் நிகழாமலிருக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் முறையாக தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினா் செயலா் சரவணகுமாா், கூடுதல் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் ராஜேந்திரபாலாஜி, சுற்றுச்சூழல் பொறியாளா் சென்னை தெய்வானை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் கூடுதல் இயக்குனா்கள் சித்தாா்த்தன், ராஜசேகா், கடலூா் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் துணை இயக்குனா் மகேஸ்வரன், கடலூா் வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன், கடலூா் வட்டாட்சியா் மகேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.