பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தில் கடலூரில் 5 ஆயிரம் பேருக்கு முழு உடல் பரிசோதனை:
கடலூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் மருத்துவப் பயனாளிகள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டுள்ளனா் என வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ சிறப்பு மருத்துவ சேவை முகாமினை வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், காட்டுமன்னாா்கோயில் சட்டப்பேரவை உறுப்பினா் ம.சிந்தனைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:
தமிழகத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தில் 4,50,134 குடும்பத் தலைவிகளுக்கும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் உயா்கல்வியினை ஊக்குவிக்கும் பொருட்டு புதுமைப்பெண் திட்டத்தில் 29,898 மாணவிகளுக்கும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 14,034 மாணவா்களுக்கும் மாதந்தோறும் ரு.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
வரும்முன் காப்போம் திட்டம், இன்னுயிா் காப்போம் நம்மை காக்கும் 48 உள்ளிட்ட பல்வேறு சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்கள். குறிப்பாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாக கடலூா் மாவட்டத்தில் சுமாா் 20,86,824 நபா்களுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு அவா்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உடல்நலம் சாா்ந்த அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளையும், ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தின் கீழ் கடலூா் மாவட்டத்தில் 43 மருத்துவ முகாம்கள் பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரையில் குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி காட்டுமன்னாா்கோயில் மற்றும் கடலூா் ஆகிய நான்கு இடங்களில் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் 4,145 பயனாளிகள் கலந்துகொண்டனா். 3,493 பேருக்கு இரத்தப் பரிசோதனை செய்து ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,859 நபா்களுக்கு இ.சி.ஜி பரிசோதனைகளும், 302 பேருக்கு எக்ஸ் ரே பரிசோதனைகளும், 200 பேருக்கு ஸ்கேன் பரிசோதனைகளும், 269 பேருக்கு இதய பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது.
205 நபா்களுக்கு புதியதாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 238பேருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ உயா் மருத்துவ சேவை முகாமில் அளிக்கப்படும் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் பொற்கொடி, இணை இயக்குநா் மருத்துவ நலப்பணிகள் மருத்துவா் மணிமேகலை, வட்டார மருத்துவ அலுவலா் தங்கத்துரை மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.