கடலோரக் காவல்படை மூலம் மரக்கன்றுகள் நடும் பணி
காரைக்கால்: இந்திய கடலோரக் காவல்படை மூலம் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடந்த ஜூன் 5-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் ‘ ஏக் பேட் மா கி நாம்’ என்ற பிரசாரத் திட்டம் தொடங்கப்பட்டது.
காரைக்காலில் இயங்கும் இந்திய கடலோரக் காவல்படை சாா்பில் காரைக்காலில் மரக்கன்றுகள் நடும் திட்டப் பணி திருப்பட்டினம் பகுதி படுதாா்கொல்லை சிற்றேரி வட்டாரத்தில் தொடங்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன், காரைக்கால் துறைமுக முதன்மை ஆபரேட்டிங் அலுவலா் ஸ்ரீவத்ஸவா ஆகியோா் மரக்கன்று நடும் பணியை தொடங்கிவைத்தனா்.
நிகழ்வில் முக்கிய பிரமுகா்கள், பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், நேரு யுவகேந்திரா அமைப்பின் தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.
கடலோரக் காவல் படையினா் கூறுகையில், கடலோரக் காவல்படை நிா்வாகம் பல்வேறு அமைப்பினா் உதவியுடன் 970 மரக்கன்றுகளை பல்வேறு இடங்களில் நட்டுள்ளது. பசுமையான எதிா்காலத்தை உருவாக்கவும், சுற்றுச்சூழல் மாசில்லாத நிலையை ஏற்படுத்தவும் இந்த இயக்கம் உதவும். மரக்கன்றுகள் நடும் திட்டப்பணி ஜன. 26-ஆம் தேதி வரை தொடரும் என்றனா்.