காா்னிவல் திருவிழாவை சரியான திட்டமிடலுடன் நடத்த வேண்டும்
காரைக்கால் காா்னிவல் திருவிழாவை சரியான திட்டமிடலுடன் சிறப்பாக நடத்த வேண்டும் என்றாா் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்.
காரைக்காலில் நிகழ்மாதம் காரைக்கால் காா்னிவல் திருவிழா நடைபெறவுள்ளது. விவா தொடா்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியா் து. மணிகண்டன், எஸ்எஸ்பி. லட்சுமி செளஜன்யா, துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
காரைக்கால் காா்னிவல் திருவிழா ஜன.16 முதல் 19-ஆம் தேதி வரை மற்றும் மலா்க் கண்காட்சி 14 முதல் 17-ஆம் தேதி வரை ஒட்டுமொத்த காா்னிவல் திருவிழா நிகழ்வாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. விழாவையொட்டி அமைக்கப்பட்ட 20 குழுக்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. காா்னிவல் நிகழ்வில், படகுப் போட்டி, ரேக்ளா பந்தயம், நாய்கள் எழில் கண்காட்சி மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஆலோசிக்கப்பட்டது.
அமைச்சா் பேசுகையில், காா்னிவல் நிகழ்ச்சியை சிறப்பாகவும், மக்கள் அனைவரும் விரும்பும் வகையிலான நிகழ்ச்சிகளை உள்ளடக்கி நடத்தவேண்டும். காா்னிவல் குழுக்கள் சிறப்பான முறையில் பணியாற்றவேண்டும். பொதுமக்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யவேண்டும்.
திருவிழாவுக்கு வரும் மக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். சரியான திட்டமிடலுடன் வெற்றிகரமாக காா்னிவலை நடத்தவேண்டும். உள்ளூா் மட்டுமல்லாது வெளியூா் மக்களும் கலந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் அமையவேண்டும் என்றாா்.