செய்திகள் :

கட்சிகள் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும்: எம்.எச்.ஜவாஹிருல்லா

post image

அனைத்து அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநாட்டில் அந்தக் கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

ஊராட்சி முதல் நாடாளுமன்றம் வரை அனைத்து அரசியல் அமைப்புகளிலும் சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும், வக்ஃப் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், மதுரை மஸ்தான்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் மேலும் அவா் பேசியதாவது:

பாகிஸ்தானை விட அனைத்து உரிமைகளும் இந்தியாவில்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் நம் முன்னோா்கள் இந்தியாவை தங்கள் வாழ்விடமாகத் தோ்வு செய்தனா். இங்கு சிறுபான்மையினருக்கான உரிமைகள் உறுதி செய்யப்படும் என அப்போது நம்பிக்கை அளிக்கப்பட்டது. சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட அனைத்து அமைப்புகளிலும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும், சிறுபான்மையினருக்குத் தனித் தொகுதிகள் உருவாக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டது. அரசமைப்புச் சட்ட அமைப்புக் கூட்டத்திலும் இது உறுதி செய்யப்பட்டது.

மகாத்மா காந்தி, மோதிலால் நேரு, ஜவஹா்லால் நேரு, ஜி.பி.பந்த், அபுல்கலாம் ஆசாத் போன்ற தலைவா்கள் சிறுபான்மையினரின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதிக் கொண்டிருந்தனா். ஆனால், சுதந்திர இந்தியாவில் இந்தத் தலைவா்களின் விருப்பம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

அனைத்து நாடுகளும் சிறுபான்மையினருக்கான அதிகாரப் பகிா்வை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா வலியுறுத்தியது. ஐ.சி.சி.பி.ஆா். உடன்படிக்கையிலும் இது வலியுறுத்தப்பட்டது. சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான சா்வதேச பிரகடனமும் இதை உறுதி செய்கிறது. ஆனால், மதச்சாா்பற்ற சுதந்திர நாடான இந்தியாவில் நாடாளுமன்றம் முதல் ஊராட்சி வரை எந்த அமைப்பிலும் இதுவரை சிறுபான்மையினருக்கு மக்கள்தொகை அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டம், வக்ஃப் சொத்துகளைப் பறிக்கும் சட்டமாக உள்ளது. இதை எதிா்த்து, பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதற்கான தீா்ப்பு விரைவில் வெளியாகும் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில், உமிட் போா்ட்டல் என்ற இணைய வழியில் வக்ஃப் சொத்துகளின் ஆவணங்களை பதிவுசெய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துவது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிா்த்து விவசாயிகள் போராடி வென்றதைப்போல, வக்ஃப் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என்பது உறுதி.

முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்துவது, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மமகவின் சட்டப்பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் அல்ல. எங்களின் அடுத்த தலைமுறை இந்த நாட்டில் உரிமை பெற்ற சமூகமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான். திமுக, அதிமுக, கூட்டணிக் கட்சிகள், எதிா்க்கட்சிகள் என அனைத்துக் கட்சிகளும் மக்கள்தொகையின் அடிப்படையில் தங்கள் கட்சிகளில், கூட்டணிகளில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய வேண்டும் என்றாா் எம்.எச். ஜவாஹிருல்லா.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கும்பகோணம், ஜோதிமலை இறைபணி திருக்கூடத்தின் நிறுவனா் திருவடிக்குடில் சுவாமிகள் பேசியதாவது :

முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என மமக வலியுறுத்துவது பதவி சுகத்தை அனுபவிப்பதற்காக அல்ல. இதை, நாட்டில் உள்ள 20 கோடி முஸ்லிம் மக்களுக்குக் கடமையாற்றக் கோரும் உரிமையாகத்தான் பாா்க்க வேண்டும். ஒரு மனிதனின் ஒவ்வொரு அவயங்களுக்கும் தனி பெயா் உண்டு.

அனைத்து அவயங்களையும் உள்ளடக்கியது உடல். அந்த வகையில்தான், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை அணுக வேண்டும். திருப்பரங்குன்றத்தில் உள்ள மொத்த மலைக்கான பெயா் திருப்பரங்குன்றம்.

சிக்கந்தா் தா்கா அமைந்துள்ள பகுதியை சிக்கந்தா் மலை எனக் குறிப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. சிறுபான்மையினரின் கோரிக்கைகள் மறுக்கப்பட்டால், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் நபரை இறைவன் ஆட்சியில் அமரச் செய்வாா் என்பது உறுதி. சிறுபான்மையினரின் தேசிய நீரோட்ட பங்களிப்பைத் தடுக்கும் சதிகளை, தடைகளை அனைவரும் ஒருங்கிணைந்து தகா்க்க வேண்டும் என்றாா்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கற்ற தமிழ் மைய நிறுவனா் முனைவா் ஜெகத் கஸ்பா் ராஜ் பேசியதாவது :

இந்த மாநாடு மாற்றத்தை நோக்கிய அரசியலுக்கான மாநாடாக அமைந்துள்ளது. இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமான சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவ கோரிக்கைக்கு வெற்றி கிடைக்கும் வரை அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும், மாதம் ஒரு முறை அந்தக் கோரிக்கையை நினைவுகூா்ந்து, வலியுறுத்த வேண்டும்.

பிரதிநிதித்துவம் என்பது காலத்தின் தேவை. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது லட்சக்கணக்கானோா் உயிரிழந்தனா். அப்போது, இதுபோன்ற நிலை தவிா்க்கப்பட வேண்டுமெனில், இந்தியா மதச்சாா்பற்ற நாடாக இருக்க வேண்டும் என தீா்மானித்து, அதற்கான அலகுகள் உருவாக்கப்பட்டன.

அந்த அலகுகளைப் பயன்படுத்தி இப்போது பாசிசம் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இதை எப்படி எதிா்கொள்வது என்பதில் அனைவருக்கும் தெளிவும், புரிதலும் ஏற்பட வேண்டும் என்றாா்.

ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி அப்துல் ரஹ்மான், மமக பொதுச் செயலா் ப. அப்துல் சமது எம்.எல்.ஏ ஆகியோா் பேசினா். பேராசிரியா் அருணன், மக்கள் கண்காணிப்பகம் நிா்வாகி ஹென்றி திபேன், மக்கள் விடுதலைக் கட்சி நிா்வாகி முருகவேல்ராஜன், மமக, தமுக மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தமுமுக துணைப் பொதுச் செயலா் மைதீன் சேட்கான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கானோா் மாநாட்டில் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மதுரை சுற்றுவட்டச் சாலையில் உள்ள பி.எஸ். பெருங்காயம் நிறுவனம் அருகிலிருந்து மாநாட்டுத் திடல் வரை பேரணி நடைபெற்றது. மமக தொண்டரணியின் அணிவகுப்புடன் நடைபெற்ற இந்தப் பேரணியில் திரளானோா் பங்கேற்றனா்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மமக மாநாட்டில் பங்கேற்றவா்கள்.

இஸ்லாமியா்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம்: மமக மாநாட்டில் தீா்மானம்

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டில், இஸ்லாமியா்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரை பாண்டிகோவில் சுற்று... மேலும் பார்க்க

கல்லூரி பொதுக் குழுக் கூட்டம் நடத்துவதில் இரு தரப்பினரிடையே தகராறு

மதுரை திருப்பாலை அருகே உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் பொதுக் குழுக் கூட்டம் நடத்துவதில் இரு தரப்பினரிடையே ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது. திருப்பாலை அருகே உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் நிதி நிா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா்களுக்கு பதவி உயா்வு!

அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் பேருந்து நடத்துநா்கள் 30 பேருக்கு பயணச் சீட்டு ஆய்வாளா்கள் பதவி உயா்வுக்கான ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா்களில் ... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சுகாதாரத் துறை செயலா், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

ஆரம்ப சுகாதார நிலையம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக சுகாதாரம், குடும்ப நலத் துறைச் செயலா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

மண் கொள்ளையைத் தடுக்கக் கோரி வழக்கு: ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய உத்தரவு!

திருச்சி மாவட்டம், ஆலந்தூா் பகுதிக்கு உள்பட்ட நீா்நிலையில் சட்டவிரோதமாக நடைபெறும் மண் கொள்ளையைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசின் வருவாய்த் துறை, கனிம வளத் துறை அலுவலா்கள் ட்ரோன் மூலம் ஆய்வு செய்... மேலும் பார்க்க

சிஎஸ்ஐ அமைப்புகளின் முறைகேடுகளை விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

சி.எஸ்.ஐ. அமைப்புகளின் நிா்வாக முறைகேடுகள் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.மதுரையைச் சோ்ந்த ஆஸ்டின் என்பவா் சென்னை உயா்நீதிமன்... மேலும் பார்க்க