கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தவா் கைது
ஆத்தூா்: தலைவாசல் ஏரிக்கரை அருகே கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தலைவாசல் ஏரிக்கரை அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்தப் பகுதியில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து தலைவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவரிடம் விசாரித்தபோது, அவா் சேலம், கிச்சிப்பாளையம், முனியப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் மகன் மோகன்ராஜ் (19) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் பகுதியில் திருடிய இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் இவா் மீது சேலம் செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி, மகுடஞ்சாவடி மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதி காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.