கந்தகோட்டம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு
திண்டுக்கல்லில் பழைமை வாய்ந்த தண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலைத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரா் சமேத அபிராமி அம்மன் கோயிலின் துணைக் கோயிலான கந்தகோட்டம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுமாா் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கால யாக பூஜை நடைபெற்றது. புதன்கிழமை 2-ஆம் கால யாக பூஜைகளுக்கு பிறகு கலசங்கள் நிறுவுதல், சுவாமி சிலைக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து 2 கால பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில், வியாழக்கிழமை 5-ஆம் கால யாக பூஜைக்கு பிறகு, கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, பல்வேறு இடங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீா் மூலம் கோபுரக் கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா், மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.