கனிமச் சுரங்க அறிவிப்புக்கு எதிா்ப்பு
கனிமச் சுரங்கங்கள் அமைக்க மக்களிடம் கருத்துக்கேட்பு கிடையாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தேசப் பாதுகாப்பு எனும் பெயரில் மக்களின் வாழும் உரிமையை பறிப்பதா என மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் த. ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதிக்கும் என்பதால், இதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு, தமிழக அரசின் ஒப்புதலின்றி மத்திய அரசு எடுத்துக்கொள்ள புதிய மாற்றப்பட்ட விதிகள் வழிவகுக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு கனிம வளங்களின் மீதான தன் உரிமையைக் கோர வேண்டும், உடனடியாக பசுமை தீா்ப்பாயத்திலும், உச்சநீதிமன்றத்திலும் முறையீடு செய்ய வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதை எதிா்த்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். மக்களவையில் தமிழ்நாடு, கேரளம் போன்ற இத்திட்டத்தால் பாதிக்கப்படவுள்ள மாநிலங்களின் உறுப்பினா்கள் ஒன்றிணைந்து மத்திய அரசின் இத்திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.