நெல்லை: ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோயில் திருக்கல்யாணம்; திரளான பக்தர்கள் சாமி த...
`கனிவானவர்; ஆனால் கண்டிப்பானவர்..!’ - சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச விடுவதில்லை என்றும், உறுப்பினர்கள் பேசும்போது குறுக்கே பேசுவதாகவும், தொலைக்காட்சியில் தாங்கள் பேசுவதை நேரலை செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது அதிமுக.
இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி தலைமையில் விவாதம் நடைபெற்றது. தன் மீதான விவாதம் என்பதால், விவாதம் தொடங்கியதும் பேரவையில் இருந்து வெளியேறினார் அப்பாவு.

'போங்க... போங்க...' என்று சபாநாயகர் கிண்டல் செய்கிறார்
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர், "அவைத் தலைவர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார். அனைத்து உறுப்பினர்களையும் சமமாக நடத்த வேண்டியது சபாநாயகரின் கடமை.
ஆளுங்கட்சியின் எண்ணத்திற்கு ஏற்ப குறைந்த நாட்களே சபாநாயகர் அவையை நடத்தி உள்ளார். கருப்பு சட்டை அணிந்து வந்ததால் அ.தி.மு.க., உறுப்பினர்களை காண்பிக்காமல் தொலைக்காட்சிகளில் இருட்டடிப்பு செய்வதா?
அ.தி.மு.க., சார்பாக கொடுக்கப்படும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை; அ.தி.மு.க., வெளிநடப்பு செய்தால் 'போங்க... போங்க...' என்று சபாநாயகர் கிண்டல் செய்கிறார்." எனப் பேசினார்.
`கனிவானவர் ஆனால் கண்டிப்பானவர்’
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ``ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர் அப்பாவு அவர்கள். கனிவானவர், அதேநேரம் கண்டிப்பானவர். இந்த இரண்டு குணங்களும் பேரவைக்குத் தேவை என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். அப்படியில்லாமல் பேரவையை நடத்த முடியாது.
அப்பாவு அவர்கள், என்னுடைய தலையீடோ அல்லது அமைச்சர்களின் தலையீடோ இல்லாமல் பேரவையை நடத்தி வரும்கிறார்.
கடந்த ஆட்சியில் இருந்ததைப் போல அல்லாமல், ஜனநாயக அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றே என நினைத்து செயலாற்றுகிறார்.

எதிர்கட்சி உறுப்பினர்களிடமும் பாசமும் பற்றும் கொண்டு செயல்படுபவர் என்பதை மனசாட்சியுடன் சிந்திக்கக் கூடியவர்கள் ஒப்புக்கொள்வார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவை தலைவருடன் பாசமாக நின்று பேசிய காட்சிகளை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்.
எதிர்க்கட்சி தலைவருடன் கண்சாடையில் பேசுவதையும், சில விஷயங்களை குறிப்பால் உணர்த்துவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
எங்களைப் பொறுத்தவரை பேரவையில் வாதங்களை விருப்பு வெறுப்பின்றி, நாகரீகமாக வைக்க முடியும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கொண்டவர்.
23.03.2017 அன்று இந்த அவையில் நான் பேசியதை எண்ணிப்பார்க்கிறேன். எத்தனை விதிமீறல்கள், மரபிலிருந்து விலகல்கள் என்பதை நான் சுட்டிக்காட்டியுள்ளேன். இன்று அப்படியா என்று நடக்கிறது என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
அப்பாவு அவர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சில அதிமுக உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டுள்ளது. அவர்களது குற்றச்சாட்டில் உண்மைக்கு மாறான தகவல்கள் இருப்பதால் பேரவைத் தலைவரின் நடுநிலைமையை பறைசாற்ற வேண்டிய கடமை முதலமைச்சராக எனக்கு உள்ளது, உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

அன்றைக்கு திமுக உறுப்பினர்களைப் பார்த்து அவைக்கு ஒவ்வாத வார்த்தைகள் பேசப்பட்டன. அதிமுகவினர் பேசியவை அவைக்குறிப்பில் இருக்கும், திமுகவினர் பேசியவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும்.
இன்றைக்கு அவதூறான வார்த்தைகளை அதிமுகவினர் பேசினால் கூட பேரவை தலைவர் விட்டுவிடுகிறார், ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் கண்டிப்புடன் நடந்துகொள்கிறார்.
அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டாலும், குழப்பம் ஏற்படுத்தினாலும் பேரவைத் தலைவர் அவர்களை சமாதானப்படுத்தில் அமர வைக்க முயல்வாரே தவிர, எங்களை வெளியேற்றியதைப் போல ஒருநாளும் வெளியேற்ற உத்தரவிடமாட்டார்....
அதிமுகவின் உட்கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? என்ற விவாதத்தை வெளியில் உள்ளவர்கள் நடத்தட்டும்" எனப் பேசினார் மு.க.ஸ்டாலின்.
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையந்ததாக கூறப்பட்டது. அதையடுத்து டிவிஷன் அடிப்படையில் நடத்தப்பட்ட எண்ணி கணிக்கும் வாக்கெடுப்பிலும் தீர்மானம் தோல்வி அடைந்தது.
தீர்மானத்துக்கு ஆதரவாக 63 பேரும் எதிராக 154 பேரும் வாக்களித்துள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன் சர்ச்சைகளுக்கு இடையே, இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தீர்மானம் தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து, அப்பாவு சபாநாயகராக மீண்டும் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்தினார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks