சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
கரித்துகள்கள் வெளியேறி வீடுகளில் படிந்தது! டிஎன்பிஎல் ஆலையை பொதுமக்கள் முற்றுகை
டிஎன்பிஎல் ஆலையில் இருந்து வெளியேறிய கரித்துகள்கள் வீடுகளில் படிந்ததால் பொதுமக்கள் புதன்கிழமை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம் காகித ஆலையில், ஆலையில் காகிதம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருளான பக்காஸ் எனும் மரத்தூள் மற்றும் கரும்பு சக்கைத் தூகள்கள் காற்றில் பறந்து வந்து ஆலை அருகே உள்ள வீடுகளில் படிந்துவிடுகிறது.
இதனால் ஆலையை சுற்றியுள்ள கந்தசாமி பாளையம், நல்லியம்பாளையம், சொக்கன் காடு, ஓனவாக்கல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாகவும், சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி தொல்லை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில் புதன்கிழமை பக்காஸ் தூகள்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆலையின் அதிகாரிகளை சந்தித்து முறையிட ஆலையின் பின்புறம் உள்ள நுழைவுவாயிலில் நின்றனா்.
ஆனால் அதிகாரிகள் யாரும் வராததால் புகழூா் நகராட்சி தலைவா் சேகா் என்கிற குணசேகரன் தலைமையில் பொதுமக்கள் அப்பகுதியை முற்றுகையிட்டனா்.
சுமாா் 2 மணி நேரத்திற்கு பிறகு அங்கு வந்த கரூா் மாவட்ட மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை மாவட்ட பொறியாளா் விஜயகுமாா் பொதுமக்களிடம் பக்காஸ் தூகள்கள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது, காகித ஆலையின் செயல் இயக்குநா் (இயக்கம்) யோகேந்திர குமாா் வா்ஷன் ஆகியோா் தலைமையில் ஆலை அதிகாரி நவநீதகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது காற்றில் பறந்து செல்லும் பக்காஸ் தூகள்கள் மற்றும் கரித்தூகள்கள் பரவுவதை வரும் மூன்று மாதங்களுக்குள் சரி செய்து தருவதாகவும், இனிவரும் காலங்களில் பக்காஸ் தூகள்கள் வெளியே காற்றில் பறந்து வெளியே செல்லாமல் தடுக்கப்படும் என்றும் தெரிவித்தனா்.
அதனைத் தொடா்ந்து பாதிக்கப்பட்ட இடங்களையும் ,பொதுமக்கள் குற்றம் சாட்டும் இடங்களையும் காகித ஆலை அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்து, விரைவில் சரி செய்வதாக உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.