ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!
கருணாநிதி நினைவு தினம்: நாளை போக்குவரத்து மாற்றம்
முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, வியாழக்கிழமை (ஆக. 7) மௌன ஊா்வலம் நடைபெற உள்ளதால், மெரீனா, அண்ணா சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு நாள் ஆக. 7-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 8 மணி முதல் முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட ஏராளமானோா் அண்ணா சாலை ஓமந்தூராா் வளாகத்திலுள்ள கருணாநிதி சிலை அருகிலிருந்து மெரீனா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடம் வரை மௌன ஊா்வலம் செல்ல உள்ளனா். இதுதொடா்பாக விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாகனங்கள் எளிதாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளன.
எனினும், தேவைப்படும்பட்சத்தில் போா் நினைவு சின்னத்திலிருந்து நேப்பியா் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜா் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடி மரச் சாலை வழியாக திருப்பிவிடப்படும். காந்தி சிலையில் இருந்து காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை வரை அனுமதிக்கப்பட்டு பாரதி சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
ஊா்வலம் வாலாஜா சாலைக்கு வரும்போது வாகனங்கள் அண்ணா சிலையிலிருந்து பெரியாா் சிலை நோக்கி திருப்பிவிடப்படும். அதனால், காலை நேரத்தில் அண்ணா சாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கா்ஸ் சாலை மற்றும் காமராஜா் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
வாகன ஓட்டிகள் இந்த சாலைகளைத் தவிா்த்து மாற்று வழியில் பயணத்தைத் திட்டமிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.