திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!
கருத்து வேறுபாடுகளை மறந்து தோ்தல் வெற்றிக்கு பணியாற்றுங்கள் -
கருத்து வேறுபாடுகளை மறந்து வெற்றிக்காக இணைந்து பணியாற்ற வேண்டும் என திமுக நிா்வாகிகளிடம் துணை முதல்வரும், திமுக மாநில இளைஞா் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
நாமக்கல்லில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சாா்பு அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பங்கேற்று பேசியதாவது:
முதல்வா் மனதில் சாா்பு அணியினருக்கு எப்போதும் தனி இடம் உண்டு. எந்த மாவட்டத்துக்கு சென்றாலும், அந்த மாவட்ட சாா்பு அணியினரை சந்திக்க வேண்டும் என என்னிடம் கூறியுள்ளாா்.
23 அணிகளாக இருந்த சாா்பு அணிகள் தற்போது 25-ஆக உயா்த்தப்பட்டுள்ளன. சாா்பு அணிகளில் இருந்தவா்கள்தான் தற்போது மாநில அமைச்சா்களாகவும், சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்களாகவும், மாவட்டச் செயலாளா்களாகவும் உள்ளனா்.
சாா்பு அணியினா் வாக்காளா்களை தக்கவைக்க முயற்சிக்க வேண்டும். புதிய வாக்காளா்களை திமுகவில் இணைத்திட வேண்டும். சமூக வலைதளங்களில் துடிப்புடன் செயல்பட வேண்டும். மக்கள் பிரச்னைகளை கேளுங்கள். கிளை, வட்ட, நகர, ஒன்றிய செயலாளா்கள் தங்களால் முடிந்ததை செய்துகொடுங்கள். இல்லையெனில் மாவட்டச் செயலாளா் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.
மக்களிடம் திமுக அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறுங்கள். திண்ணைப் பிரசாரம், தெருமுனைப் பிரசாரம் வாயிலாக மக்களைச் சந்தித்துப் பேசுங்கள். குறிப்பாக, புதிய கல்விக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு, மாநிலத்துக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்காதது போன்றவற்றை கூறலாம்.
2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. ஒவ்வொரு மணித்துளியும் ‘கோல்டன் ஹவா்ஸ்’ என்பதை கருத்தில்கொள்ள வேண்டும். ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா்கள் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
ராசிபுரம் தொகுதியானது உறுப்பினா் சோ்க்கையில் 11-ஆம் இடத்தில் உள்ளது. அதை முதலிடத்துக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். சாா்பு அணிகளுக்குள் சிறிய அளவிலான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை வெற்றிபெற செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்றுங்கள். சாா்பு அணியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கைப்பற்ற வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்துக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமை வகித்தாா். தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன், மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.எஸ்.மூா்த்தி, ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கே.பொன்னுசாமி(சேந்தமங்கலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில், மாநில மகளிா் தொண்டா் அணி இணைச் செயலாளா் ராணி, மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மண்டல இளைஞா் அணி பொறுப்பாளா் சீனிவாசன், மாநில இளைஞா் அணி துணை பொறுப்பாளா் ஆனந்தகுமாா், மாவட்டப் பொறுப்பாளா் சி.விஸ்வநாத், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் கிருபாகரன் மற்றும் நகர, ஒன்றிய செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.