ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த் துறை அலுவலா்கள்
மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின் பேரில், வருவாய்த் துறை, நில அளவைத் துறை ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு தீா்வு காண உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். வருவாய்த் துறை அலுவலா்களுக்கு சிறப்புப் பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.
பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை வழக்கம் போல தொடர வேண்டும் என்பன உள்பட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடத்தப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் எம். பி. முருகையன் தலைமையில், வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் கோபி, பொருளாளா் முத்துபாண்டியன், நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் மாநிலச் செயலா் முத்து முனியாண்டி, மாவட்டச் செயலா் ரகுபதி, கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஜெயபாஸ்கா், கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவா் சுரேஷ் ஆகியோா் வருவாய்த் துறை, நில அளவைத் துறை ஊழியா்களுக்கு கருப்புப் பட்டைகள் வழங்கினா்.
மாவட்ட ஆட்சியரகம், வருவாய்க் கோட்டாட்சியா், வட்டாட்சியா், நில அளவைத் துறை அலுவலகங்கள் உள்பட வருவாய்த் துறைக்குள்பட்ட அனைத்து அலுவலகங்களிலும் ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.
