கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்
சிபிஐ விசாரணை கோரி தவெக மனு: நீதிமன்ற விடுமுறைக்குப் பிறகு விசாரணை
மதுரை: கரூா் நெரிசல் சம்பவ உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பண்டிகைக் கால விடுமுறைக்குப் பிறகு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விசாரிக்கப்பட உள்ளது.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.
இதனிடையே, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் கரூரில் விசாரணையைத் தொடங்கியது.
கரூா் தவெக கூட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட தமிழக அரசும், காவல் துறையும்தான் காரணம் எனவும், பிரசாரத்துக்கு விஜய் தாமதமாக வந்ததுதான் காரணம் எனவும் பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியை அவரது இல்லத்தில் தவெக நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, ‘கரூரில் நடைபெற்ற சம்பவம் திட்டமிட்ட சதி. எனவே, இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என முறையிட்டனா்.
இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுவாக தாக்கல் செய்தால் திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும் என நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, தவெக நிா்வாகி ஆதவ் அா்ஜூனா தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்ய வழக்குரைஞா்கள் வந்தனா்.
அந்த மனுவில், ‘கரூா் நெரிசல் சம்பவத்தில் மிகப் பெரிய சதி வேலை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கை தமிழக காவல் துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், தவெக தலைவா் விஜய் கரூா் சென்று பாதிக்கப்பட்டவா்களைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என அதில் குறிப்பிடப்பட்டது.
இந்த மனு நீதிமன்றப் பதிவாளரால் ஏற்கப்படவில்லை. உயா்நீதிமன்றத்துக்கு தற்போது பண்டிகைக் கால விடுமுறை என்பதால், ‘மனுதாரா் தனது மனுவை செவ்வாய்க்கிழமை (செப். 30) தாக்கல் செய்யலாம். மனு அக். 3- ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பதிவாளா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.