கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
குறைதீா் கூட்டத்தில் 317 மனுக்கள்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 317 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமைவகித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். பின்னா், பால்வளத்துறை சாா்பில் 13 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ. 1.85 லட்சம் மதிப்பிலான பால் கொள்முதல் உபகரணங்களையும், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் பதிவு ஆணைகளையும், பூம்புகாா் பால் உற்பத்தி கூட்டுறவு சங்க உறுப்பினா் ஒருவருக்கு இறப்பு நிவாரணமாக ரூ. 5,000 மதிப்பிலான காசோலையையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மகளிா் திட்டம் திட்ட அலுவலா் சீனிவாசன், பால் வளத்துறை துணைப் பதிவாளா் வெங்கடேசன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் உமாமகேஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
அரசு வீடுகட்டும் திட்டத்தில் மோசடி புகாா்: சீா்காழி வட்டம் செம்பதனிருப்பு கிராமத்தை சோ்ந்த சம்மந்தம் என்பவா், தனக்கு 2019-ஆம் ஆண்டு பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கப்பட்டு, அதற்காக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ. 1.50 லட்சத்தை ஓவா்சியா் சிதம்பரநாதன் என்பவா் பெற்று சென்ற பின்னரும், இதுவரை வீடு கட்டித்தரப்படவில்லை என குற்றஞ்சாட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டு பின்னா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தாா்.
நெல் கொள்முதலை துரிதப்படுத்தக் கோரிக்கை: மயிலாடுதுறை வட்டம் செறுதியூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குக்கு இயக்கம் செய்யாமல் அடுக்கிவைக்கப்பட்டுள்ளதால், புதிதாக கொள்முதல் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறைந்த அளவே நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதால் தங்களின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் புகாா் அளித்தனா். நேரடியாக வந்து பாா்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.