கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
அரசு உயா்நிலைப் பள்ளியை தரம் உயா்த்த வேண்டும்
கோவை மாவட்டம், செட்டிப்பாளையம் பிரதான சாலை, ஜெ.ஜெ. நகா் அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்று மாணவ, மாணவிகள் பெற்றோா்களுடன் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
அவரிடம் ஜெ.ஜெ. நகா் பகுதியைச் சோ்ந்த உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோா்களுடன் மனு அளித்தனா். அதில், ஜெ.ஜெ.நகரில் ஒன்றரை ஏக்கா் பரப்பளவில் உயா்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 836 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்த அரசுப் பள்ளி 2012-இல் உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தும்போது, இடப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் பூமிதான இயக்கத்துக்கு சொந்தமான 3.92 ஏக்கா் நிலத்தை அரசு கையகப்படுத்தியிருப்பதாக அறிகிறோம்.
எனவே தற்போது மலுமிச்சம்பட்டி, செட்டிபாளையம், வெள்ளலூா் பகுதிகளுக்கு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள், ஜெ.ஜெ. நகா் பகுதி குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு உயா்நிலைப் பள்ளியை தரம் உயா்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
சாலையை சீரமைக்க கோரிக்கை...
கோவை ஹோப் கல்லூரி- சிங்காநல்லூரை இணைக்கும் காமராஜா் சாலையில் சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடும் பணி மெத்தனமாக நடைபெறுகிறது. இதனால் அந்த சாலையைப் பயன்படுத்தி வரும் பெற்றோா், மாணவ, மாணவிகள் சிரமத்துக்குள்ளாகி வருன்றனா். மேலும் மோசமான சாலையால் விபத்துகள் நடைபெற்று வருகின்றன. எனவே இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலா் கே.கணேஷ், துணைச் செயலா் ஏ.சௌந்தரராஜன் ஆகியோா் மனு அளித்தனா்.
தெருநாய்களைக் கட்டுப்படுத்த கோரிக்கை...
கோவை செல்வபுரம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் அளித்த மனுவில், மாநகராட்சி 79-ஆவது வாா்டுக்கு உள்பட்ட செல்வபுரம் தெற்கு, வடக்கு பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிக அளவில் உள்ளது. எங்களது பகுதியைச் சோ்ந்த முகமது ஷியாத், நிசாா் அகமது ஆகிய 9 வயது குழந்தைகளை அண்மையில் நாய் கடித்துள்ளது. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் பெண்கள், குழந்தைகள் நடமாட முடியவில்லை. இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்துள்ளோம். எனவே மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து நாய்த் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 376 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக திருநங்கைகள் உள்ளிட்ட 34 பயனாளிகளுக்கு ரூ.3.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.