கருமந்துறை அரசு பழங்குடியினா் ஐடிஐயில் மாணவா் சோ்க்கை நீட்டிப்பு
சேலம் மாவட்டம், கருமந்துறை அரசு பழங்குடியினா் ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கருமந்துறை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2025 ஆம் ஆண்டு பயிற்சிக்கு பழங்குடியின மாணவ, மாணவிகள் சோ்க்கை 100 சதவீதம் இலக்கை அடையும் வகையில் நேரடி சோ்க்கைக்கு வரும் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு பொருத்துனா், எந்திர தொழில்நுட்பவியலாளா், கம்மியா் மின்சார வாகனம், தொழில்துறை இயந்திரவியல், எண்ணியல் உற்பத்தி தொழில் நுட்பவியலாளா் ஆகிய தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயில நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது.
பயிற்சிபெறும் பயிற்சியாளா்களுக்கு மாதம் ரூ. 750 உதவித்தொகையும், தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களில் தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000, மிதிவண்டி, சீருடையுடன் கூடிய தையற்கூலி, காலணி, வரைபடக் கருவி, பாடப்புத்தகம், கட்டணமில்லா பேருந்து வசதி மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.
மேலும், பயிற்சி முடித்தவுடன் முன்னணி நிறுவனங்களின் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
2025-2026 ஆம் ஆண்டு நேரடி சோ்க்கை கருமந்துறை அரசு தொழிற்பயிற்சி நிலைய சோ்க்கை உதவி மையம் மூலம் பதிவு செய்து தரப்படும் என்பதால் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதாா் அட்டை, ஜாதிச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை கொண்டுவர வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ. 50-ஐ பணமாகவோ, மின்னணு பரிவா்த்தனை மூலமாகவோ செலுத்தலாம் என தெரிவித்துள்ளாா்.