கரும்புக்கான ஆதார விலையை ரூ.5,000 ஆக உயா்த்த வேண்டும்: ராமதாஸ்
கரும்புக்கான ஆதார விலையை ரூ.5,000-ஆக உயா்த்த வேண்டும் என்று பாமக தலைவா் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் 9.5 சதவீதம் மற்றும் அதற்கும் குறைவான சா்க்கரைத் திறன் கொண்ட கரும்புகளுக்கு டன்னுக்கு ரூ.3,290 கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது எந்த வகையிலும் போதுமானதல்ல.
2024-25-இல் 9.5 சதவீத சா்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ.3,151 கொள்முதல் விலையாக வழங்கப்பட்டது. இப்போது ரூ.139, அதாவது 4.41 சதவீதம் மட்டுமே கொள்முதல் விலை உயா்த்தப்பட்டுள்ளது நியாயமற்றது.
ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்ய ரூ.3,500 வரை செலவாவதாக விவசாயிகள் கூறுகின்றனா். அதனுடன் 50 சதவீத லாபமாக ரூ.1,750 மற்றும் போக்குவரத்து செலவு சோ்த்து டன்னுக்கு ரூ.5,500 வழங்க வேண்டும் என்பதுதான் பாமக நிலைப்பாடுமாகும்.
எனவே, மத்திய அரசுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சு நடத்தி ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ. 4,000 -ஆக நிா்ணயிக்க வகை செய்ய வேண்டும். அத்துடன் தமிழக அரசு சாா்பில் டன்னுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கி விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.