கரும்புக்கான சிறப்பு ஊக்கத் தொகையை வழங்க கோரிக்கை
விழுப்புரம்: கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சிறப்பு ஊக்கத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.கலிவரதன், செயலா் என்.முருகையன், பொருளாளா் ஜெ.நாகராஜன் மற்றும் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை காலை ஆட்சியரகத்துக்கு கரும்புகளுடன் வந்தனா்.
தொடா்ந்து, ஆட்சியா் சி.பழனியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா். அதில் கூறியிருப்பது:
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு 2024-25 ஆம் நிதியாண்டில் அனுப்பிய கரும்புக்கான ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு, தனியாா் சா்க்கரை ஆலைகளுக்கு விவசாயிகள் கரும்பை எடுத்துச் செல்லும் போது தடை செய்யக்கூடாது.
மேலும் 120 கி.மீ. தொலைவிலுள்ள படாளம் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கரும்பு கொண்டு செல்ல வேண்டும் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது. விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் கெங்கராம்பாளையம் சுங்கச்சாவடியில் விவசாயிகள் கொண்டுசெல்லும் விளைபொருள் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.