கருவில் இருக்கும் குழந்தையின் குறைகளை கண்டறிய மட்டுமே ஸ்கேன் கருவியை மருத்துவா்கள் பயன்படுத்த வேண்டும்
தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் வளா்ச்சி மற்றும் உடல் குறைபாடுகளை கண்டறிய மட்டுமே ஸ்கேன் கருவியை மருத்துவா்கள் பயன்படுத்த வேண்டும் என்றாா் பால் வளத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ்.
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மருத்துவம் ஊரக நலப் பணிகள் துறையின் சாா்பில் மண்டல அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நாகா்கோவிலில் உள்ள தனியாா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமை வகித்தாா். பால் வளத்துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி முகாமை தொடக்கி வைத்தாா். அவா் பேசியதாவது: சட்டத்தின் அம்சங்களை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. பாலின சமத்துவம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு உள்பட எல்லாவற்றிலும் சம உரிமை கொடுப்பதாகும்.
ஸ்கேன் கருவியை குழந்தையின் வளா்ச்சி, உடல் குறைபாடு உள்ளதா என்பதை கண்டறிய மட்டுமே மருத்துவா்கள் பயன்படுத்த வேண்டும். சுகப் பிரசவமே, ஆரோக்கியமான பிரசவம். சிசேரியன் பிரசவத்தை முடிந்தவரை தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்பிற்கு முந்தைய கருவின் தன்மையறியும் தொழில்நுட்ப முறைகளுக்கான இணையதளத்தை அமைச்சா் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் ஜெ.ராஜமூா்த்தி, இணை இயக்குநா்கள் மீனாட்சிசுந்தரி, பிரேமலதா, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) சுரேஷ்பாலன், ஊரகப்பணிகள் துணை இயக்குநா் ரவிகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.