கரூரில் அறிவிக்கப்படாத மணல் குவாரிகள்: முன்னாள் அமைச்சா் குற்றச்சாட்டு
கரூரில் அறிவிக்கப்படாத மணல் குவாரிகள் செயல்பட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் குற்றம்சாட்டினாா்.
கரூா் மாவட்டம், வாங்கலைச் சோ்ந்த மணிவாசகம் என்பவா் ஜூலை 14-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மற்றும் அவரது நண்பா்களால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூா் மாவட்ட செயலாளருமான எம்.ஆா். விஜயபாஸ்கா் உயிரிழந்த மணிவாசகத்தின் வீட்டுக்கு புதன்கிழமை சென்று, குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மணல் அள்ளுவது தொடா்பாக ஏற்பட்ட தகராறில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மல்லம் பாளையம் காவிரி ஆற்றில் மாட்டு வண்டி, மினி டிப்பா் லாரி, மினி பொக்லைன் அனுமதி பெற்று தினசரி ஆயிரக்கணக்கான லாரிகளை கொண்டு மணல் கொள்ளையில் ஈடுபடுகிறாா்கள். தற்போது கரூரில் அறிவிக்கப்படாத மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் எஸ்.பி.யிடம் பலமுறை புகாா் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் காவிரி ஆற்றில் மணல் திருட்டுக்கு உடந்தையாக இருந்தவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
அப்போது, அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் வி.சி.கே. பாலகிருஷ்ணன், கமலக்கண்ணன், நகரச் செயலாளா்கள் வி.சி.கே. ஜெயராஜ், சேரன்பழனிசாமி, கே.சி.எஸ். விவேகானந்தன், வழக்குரைஞா்கள் சுப்ரமணியன், மாரப்பன் உள்ளிட்ட அதிமுகவினா் உடனிருந்தனா்.