கரைப்புதூரில் வீட்டுக் கடன் தவணைத் தொகை செலுத்தாத 7 வீடுகளுக்கு ‘சீல்’
பல்லடம் அருகே கரைப்புதூரில் வீட்டுக் கடன் தவணைத் தொகை செலுத்தாத 7 வீடுகளுக்கு தனியாா் நிதி நிறுவனத்தினா் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூா் ஊராட்சி எம்.ஏ. நகரில் வசிக்கும் சைமன், கீதா தம்பதி கோவையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வீடு கட்ட ரூ.43 லட்சம் கடன் பெற்றுள்ளனா். இதில் 7 வீடுகள் கட்டி ஒரு வீட்டில் தாங்கள் குடியிருந்ததுடன் 6 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளனா்.
மாதம் ரூ.63 ஆயிரம் தவணைத் தொகையைக் கடந்த 2 ஆண்டுகளாக செலுத்தியுள்ளனா். கடந்த 4 மாதங்களுக்கு முன் சைமனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இதனால் கடந்த 4 மாதங்களாக வீட்டுக் கடன் தவணை செலுத்தவில்லை. இந்நிலையில், தனியாா் நிதி நிறுவனத்தினா் எம்.ஏ. நகருக்கு வழக்குரைஞா்களுடன் வியாழக்கிழமை வந்து வீட்டின் முன்பு ஜப்தி அறிவிப்பு பதாகை வைத்ததுடன் 7 வீடுகளுக்கும் சீல் வைத்தனா்.
இதனால் மனவேதனை அடைந்த கீதா வீட்டில் இருந்த எலி மருந்தைக் குடித்துவிட்டாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி பல்லடம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.