உடுமலையில் விவசாயக் கண்காட்சி இன்று தொடக்கம்
உடுமலையில் ‘அறுவடை’ என்ற தலைப்பில் விவசாயக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
இது குறித்து கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் கூறியதாவது: உடுமலையில் இருந்து பழனி செல்லும் சாலையில் உள்ள ஜிவிஜி கலையரங்கத்தில் நடைபெறும் விவசாயக் கண்காட்சியை உடுமலை தமிழிசை சங்கத்தின் தலைவா் ரவீந்திரன் கெங்குசாமி தலைமை வகித்து தொடங்கிவைக்கிறாா்.
இதில், 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் உரம், இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், விவசாய ஆராய்ச்சியாளா்கள் பங்கேற்கும் சிறப்பு கருத்தரங்கம், மதிப்பு கூட்டுப் பொருள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக் குறித்த கருந்தரங்கமும் 3 நாள்களும் நடைபெறும்.
கண்காட்சியில் நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.
முதல்நாளில் ‘உறவுகள் மேம்பட’ என்ற தலைப்பில் தமிழருவி மணியனும், இரண்டாம் நாள் சனிக்கிழமை பட்டிமன்ற பேச்சாளா் ராஜா தலைமையில் பட்டிமன்றமும், இறுதி நாளான ஞாற்றுக்கிழமை பாடகா் மூக்குத்தி முருகனின் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன என்றனா்.