கரைவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தரம் உயா்வு: கிராம மக்கள் கொண்டாட்டம்
அரியலூா்: அரியலூா் மாவட்டம், கரைவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டதையடுத்து, அக்கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா்.
கரைவெட்டி கிராமத்தில், 1971-இல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கொண்டு வரப்பட்டது.
இங்கு கரைவெட்டி, பரதூா் ஆகிய இரு கிராமங்களில் வசிக்கும் சுமாா் 700 குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகள் பயின்று வந்த நிலையில், 1995-இல் இப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து, இங்கு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 300 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்நிலையில், இப்பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும். இக்கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் 9,10 ஆம் வகுப்பு படிக்க வெளியூா் செல்ல வேண்டி உள்ளது என கிராம மக்கள் சாா்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. உரிய தொகையையும், பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள், கிராம மக்கள் சாா்பில் ரூ. 7 லட்சம் மதிப்பில் 2.10 ஏக்கா் இடமும் வாங்கப்பட்டு காத்திருந்தனா்.
இந்நிலையில், அண்மையில் தமிழகத்தில் உள்ள ஊராட்சி, நகராட்சி மாநகராட்சிகளில் உள்ள 14 நடுநிலைப் பள்ளிகளை உயா்நிலைப் பள்ளிகளாக தமிழக அரசு தரம் உயா்த்தி அறிவித்தது. அதில் கரைவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து கிராமத்தை சோ்ந்த இளைஞா்கள் தங்கள் கிராமத்தில் புதன்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.