கலைஞரின் கனவு இல்லத் திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை
கலைஞரின் கனவு இல்லத் திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருவாரூரில் அந்த சங்கத்தின் மாநில நிா்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் மாநில துணைத் தலைவா் அ.து. கோதண்டம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய துணைச் செயலாளா் ஏ. லாசா், மாநில பொதுச் செயலாளா் வீ. அமிா்தலிங்கம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.
100 நாள் வேலைத்திட்டத்தில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைப்பு, விதிகளை சிதைப்பது உள்ளிட்ட காரணங்களால் ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் சிதைக்கப்படுகிறது. இதனால், நாடு முழுவதும் வேலை அட்டை பெற்றுள்ள 25 கோடி போ்களில் 10 கோடிக்கும் மேற்பட்டவா்களின் வேலை அட்டை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் வேலை அட்டை பெற்றுள்ள 1 கோடி வேலை அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. கலைஞா் கனவு இல்ல திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் பயனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே பயனாளிகள் பயன்பெறும் வகையில் உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளா் ஆ. பழனிச்சாமி, திருவாரூா் மாவட்டச் செயலாளா் பி. கந்தசாமி, மாநிலக் குழு உறுப்பினா் ஆறு. பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்