களிமண்ணை அழகிய பானையாக்கும் வித்தைக்காரர்.. கும்ப ராசியினர்!
பாரம்பரிய ஜோதிடத்தில் 12 ராசி மற்றும் லக்னத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை, திறமை உண்டு. ஒரு ஜாதக கட்டத்தில் சூரியன் சந்திரனை தவிர மற்ற கிரகங்களான செவ்வாய், சுக்கிரன், குரு, புதன், சனி இரு ஆதிபத்திய கட்டத்தில் ஆட்சி பெற்று இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் சனிபகவான் அதிக ஆண்டுகள் மெதுவாக பயணிக்கும் கிரகம். இவர் தொழில், கர்மாவை குறிக்கும் 10ம் வீடான மகரத்தையும், லாபம் கூடிய வெற்றி, நிறைவான மகிழச்சியை குறிக்கும் 11ம் வீடான கும்பத்தையும் சனிபகவான் தன்னுடைய ஆளுமைக்குக் கீழ் வைத்துள்ளார். அதிலும் ஸ்திர வீடான கும்பத்தில் தான் அவர் மூல திரிகோணம் பெற்று சிறப்புடன் செயல்படுவார்.
சனி பகவான் ஆசீர்வாதம் பெற்றவர்கள் யார் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக இவர்களுக்குப் பிடித்த நிறம் கருப்பு, அதிர்ஷ்ட எண் 8, பிராண்டட் துணி மீது ஆசை, வீடு அமையும் திசை மேற்கு மற்றும் பல்வேறு தொழில்களை கற்றுத் தேர்ந்தவராக இருப்பார்கள். முக்கியமாக இவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் நீதி வழியிலிருந்து தவறமாட்டார்கள். இவர்கள் நிறைய பேர் ஆசிரியர், சட்டம் ஒழுங்கு துறைகளில் இருப்பார்கள். களிமண்ணையும் அழகிய விதவிதமான பானையாக்கும் வித்தையை கற்று தெரிந்த புத்திசாலிகள். கும்பத்தில் பிறந்தவர்களின் சிறந்த யோகம் மற்றும் பாதகத்தின் பொதுவான பலன்களைப் பார்ப்போம்.
கும்ப ராசியின் சின்னம் என்பது ஒருவர் தோளில் ஒரு மூடிய குடத்தை வைத்திருப்பார். இந்த புனித குடத்தில் என்ன என்று கண்டுபிடிப்பது கடினம். அதேபோல் இவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கும். முக்கியமாக அங்குப் பாவிகளின் சேர்க்கை பார்வை இருந்தால் அந்த குடம் முழுக்க அழுக்காகவும் மாறலாம். அதேபோல் அவர்கள் எண்ணமும் செயலும் தவறான வழியை நோக்கிச் செல்லும்.
கும்ப ராசியாக இருப்பவர்கள் கடைசி வரை தாய் மற்றும் அன்பின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். இவர்களுக்குக் காலதாமத திருமணம் அல்லது கல்யாணம் என்பது பல்வேறு தடைகள் மீறி நடக்கும். குடும்பம் மற்றும் குழந்தைகள் மீது அதீத அன்பு இருக்கும் ஆனால் வெளியில் காட்ட மாட்டார்கள். கும்ப ராசியும், சனியும் காற்று தத்துவத்தைக் கொண்டவர்கள். காற்றின் தத்துவப்படி இந்த பிரபஞ்சம் மற்றும் மற்றவர்கள் நினைக்கும் செயல்களை எளிதாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டு. “மக்கள் தொண்டு மகேசன் தொண்டு” என்று வாழ்வது இவர்களுக்குப் பிடிக்கும். தொழிலதிபர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இவர்களோடு பயணம் செய்யும்பொழுது அவர்களின் வாழ்க்கைத்தரமும் உயரும்.
கும்பத்திற்கு 3ல் சனி நீச்சம் முயற்சி என்பதை அதிகம் விதைக்க வேண்டும். இவர்கள் நில்-கவனி-செல் என்ற கோட்பாடு படி செயல்படுவார்கள். ஒரு உயர் அதிகார பொறுப்பில் இருப்பவர்கள் தன்னுடைய புத்திசாலித்தனத்தால், நிதானமாகச் செயல்பட்டு சரியான முறையில் வெற்றி வாகை சூடுவார்கள். தொழிலில் நஷ்டத்தையே சந்திக்கும் நிறுவனங்கள் மேலே உயர, கும்ப ஜாதகரை துணையாக வைத்துக் கொண்டால் வெற்றி நிச்சயம். அதேசமயம் ஜாதக கட்டத்தில் மற்ற கிரகங்களும் சுபத்துவத்துடன் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இன்றும் ஒருசில பெரிய நிறுவனங்களில் தலைமை நிர்வாக பொறுப்பை அவரவர் ஜாதகத்தைக் கொண்டு முடிவு செய்கிறார்கள். ஒரு புதிய தொழில் துவங்க வேண்டுமென்றால் புதிய தொழில் நுட்பத்தை அறிந்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு தொழிலாளிகள் கட்டாயம் தேவை. இவற்றில் இந்த லக்கின / ராசிக்காரர்கள் பெரிய ஆளுமை செய்யும் திறன், முதலாளித்துவம், மற்றும் உயர் பதவிக்குத் தகுதியானவர்கள். இது தவிர சிம்மம், விருச்சிகம், மேஷம் லக்னக்காரர்களுக்கு இந்த தன்மை இருக்கும்.
கும்பத்திற்கு 2ம் வீட்டில் புதன் நீச்சம் சுக்கிரன் உச்சம். இவர்கள் படிப்பில் சிறிது மந்தம் இருந்தாலும் தங்களுடைய அனுபவ பாடத்தில் படிப்படியாக வயதுக்கு ஏற்ப உயர்வு பெறுவார்கள். இவர்கள் மனதில் குபேரனாகும் எண்ணம் அதிகம் இருக்கும். இந்த செல்வந்தர்கள் குடத்தில் ஏற்றிய விளக்கு போல மற்றவர்களுக்கு ஒளியாகவும் வழிகாட்டியாகவும் இருப்பார்கள். கும்பத்துக்கு 5ம் வீடான மிதுன ராசி புதிய தொழில்நுட்ப கோணத்தில் யோசித்து பல்வேறு தொழில்களை விரிவாக்குவார்கள். அதேசமயம் அந்த புதன் அஷ்டமாதிபதியாக வருவதால் பல்வேறு விஷயங்களில் ஏமாற்றத்தையும் சந்திப்பார். இவர்களுக்குப் படிப்பு அறிவை விட அனுபவ அறிவு அதிகம் உண்டு. இந்த ராசிக்காரர்கள் ஜாமீன் கையெழுத்துப் போடுவது மற்றும் கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்ப்பது நன்று. முக்கியமாக இவர்கள் செய்யும் தொழிலில் புதிய அணுகுமுறை, மற்றவர்களை வேலை வாங்கும் திறன், மற்றும் மனதிற்குச் சரி என்பதைச் செய்வார்கள். இந்த பாவத்தில் பாவிகள் சேரும்பொழுது அவர்களின் அறிவாற்றல் வெளிப்படாத வண்ணம் மங்கிப் போய்விடும். சில சமயம் உங்களுக்கு நண்பன் யார் எதிரி யார் என்று தெரியாவண்ணம் இருக்கும். எதிரிகளிடம் சிக்கிய இவர்கள் நஷ்டத்தைச் சம்பாதிப்பார்கள், ஆனாலும் இவர்கள் மேன்மேலும் வளர உழைப்புடன் கூடிய அனுபவத்தால் வெற்றியும் பெறுவார்கள்.
மேலே குறிப்பிட்ட ஜாதக அலங்காரத்தில் கும்ப ராசியில் சந்திரனை புதன் பார்வையிட்டால் அந்த ஜாதகன் வேந்தன் ஆவான். குரு பார்த்தால் நிலம் ஆளும் அரசால் அரசர்களுக்கு இணையான போக வாழ்க்கை நடத்துவான். அதுவே செவ்வாய், சூரியனோ, சனியோ, சுக்கிரனோ நோக்கினால் மாற்றான் மனைவி மீது தகாத ஆசை கொள்வான். பாவ காரகம் என்று எடுத்துக் கொண்டால் இது கால புருஷனுக்கு 11வது பாவமாகும். இங்குதான் ஒருவரின் மொத்த சந்தோஷமும் பூர்த்தி செய்யும் இடம். இந்த இடத்தில் பாவிகள் சேர்க்கை, முக்கியமாக ராகு இருப்பது செயலில் தடையை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக தற்போது கோசாரத்தின் ராகு கும்பத்தில் இருக்கிறார்.
இக்காலக்கட்டத்தில் பணம் பொருள் சேர்க்கை இருந்தாலும், ஒரு சில சொத்து பிரச்சனை, திருமணத் தடை, ஏமாற்றங்கள், குடும்ப பிரிவு, அளவுக்கு மீறிய கடன், அரசாங்க வாய்தா, மற்றும் அறுவைச் சிகிச்சை என்று வரக்கூடும். இவை அனைத்தும் பொது பலன்களே, இங்கு மற்ற கிரகங்களையும் பார்த்து தான் முழு பலனைச் சொல்ல முடியும். இந்த நேரத்தில் இவர்கள் புதிய செயல்களை துவங்காமல் இருப்பது நன்று. வெளியூர் பிரயாணம் கிட்டும். சனியின் ஆதிக்கம் பெற்றவர்கள், அவருக்குப் பிடித்த மாதிரி நீதி, நியாயம், பொறுமை, உழைப்பு, தொழிலாளர்களை ஊக்கப்படுத்துதல், ஆன்மிகப் பணி, கொடை என்ற உயரிய பண்புடன் வாழ்ந்தால் ஏழரைச் சனியின் பிடியில் சிக்க மாட்டார்கள். பாவ கிரக சேர்க்கையால் கும்பத்தில் இருக்கும் நீர் அழுக்காகவும் மாறலாம், அவற்றைப் புனித நீராக மாற்றுவது அவரவர் கடமை.
கும்ப லக்ன /ராசிக்காரர்கள் மாசி மகம் அன்று பழம்பெரும் கோயிலில் உள்ள தீர்த்தத்தில் குளித்து அங்குள்ள சுவாமிக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றுவது நன்று. சனிக்கிழமை கிழமைகளில் நீர் மோர், தயிர்ச் சாதம், வெண்பொங்கல் என்று தங்களால் முடிந்ததை தானம் செய்யும்போது ஜாதகருக்கு ஏற்படும் தடைகள் நீக்கப்படும். அதுதவிர தங்களால் இயன்ற அளவு யானை, குரங்கு, மற்றும் காகத்திற்கு உணவு, நீர் அளித்தல் சிறந்த பரிகாரம்.
Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com
Astrology says that the quality of life of those traveling with Aquarius will also improve.
இதையும் படிக்க..ஆனியில் நிச்சயம் செய்யக்கூடாதவை.. ஜோதிடம் சொல்வதென்ன?