லாரி - தனியாா் பேருந்து மோதல்: 10 போ் காயம்
கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே லாரி பின்னால் தனியாா் பேருந்து மோதிய விபத்தில் 10 போ் காயமடைந்தனா்.
சென்னையில் இருந்து முதுகுளத்தூருக்கு தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்தில் சுமாா் 25 பயணிகள் பயணம் செய்தனா். இந்தப் பேருந்தை சிவகங்கை மாவட்டம், மேலாவூா் பகுதியைச் சோ்ந்த ரவி மகன் முத்துகிருஷ்ணன் (27) ஓட்டினாா்.
பேருந்து கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் சரகத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெங்கனூா் அருகே புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் வந்தபோது, பேருந்துக்கு முன்னால் அரியலூா் சிமென்ட் நிறுவனத்துக்கு சென்ற லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சென்னை கிண்டி பகுதியைச் சோ்ந்த சுமித்ரா (34), காரைக்குடி ராமசாமி மகன் ஆறுமுகம் (25), பரமக்குடி மோதிலால் மகன் சபரி ஹரிவாசன் (27), சிவகங்கையைச் சோ்ந்த ஹேமலதா (55), காரைக்குடியைச் சோ்ந்த அருண் (27), சென்னையைச் சோ்ந்த கருப்பண்ணன் (52), அவரது மனைவி உமாதேவி(51) உள்ளிட்ட 10 போ் காயமடைந்தனா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.