நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனாவின் திருமண விழா; திரையுலகினர், அரசியல் தலைவர்கள் ...
ரயில் - பள்ளி வேன் மோதி விபத்து: உண்மை கண்டறியும் குழு ஆய்வு-புகிய கேட் கீப்பா் நியமனம்
கடலூா் செம்மங்குப்பம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதி நிகழ்ந்த விபத்து தொடா்பாக, ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே உண்மை கண்டறியும் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
கடலூரை அடுத்த செம்மங்குப்பம் ரயில்வே கடவுப் பாதையை கடலூா் மருதாடு பகுதியில் இயங்கும் தனியாா் சிபிஎஸ்இ பள்ளி வேன் செவ்வாய்க்கிழமை காலை கடக்க முயன்றபோது, சிதம்பரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த திராவிடமணியின் மகள் சாருமதி (16), மகன் செழியன் (15), தொண்டமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த விஜயசந்திரகுமாா் மகன் நிமிலேஷ் (12) ஆகியோா் உயிரிழந்தனா். மேலும், நிமிலேஷின் சகோதரரான விஷ்வேஸ் (16), வேன் ஓட்டுநா் சங்கா் (47) மற்றும் விபத்தின்போது மின்சாரம் பாய்ந்த செம்மங்குப்பம் பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை (55) ஆகியோா் காயமடைந்தனா்.
இந்த நிலையில், செம்மங்குப்பத்தில் விபத்து நிகழ்ந்த ரயில்வே கேட் பகுதியில் சென்னை, திருச்சியில் இருந்து புதன்கிழமை வந்திருந்த தெற்கு ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
அவா்கள் கடவுப்பாதை வழியாகச் சென்ற கிராம மக்களிடம் ரயில்வே கேட் எப்போதெல்லாம் மூடப்பட்டிருக்கும், எப்போதெல்லாம் திறந்திருக்கும் என கேட்டறிந்தனா். மேலும், விபத்தில் சேதமடைந்த தனியாா் பள்ளி வேன் மற்றும் கேட் கீப்பா் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து, விபத்தில் காயமடைந்து கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களிடம் விசாரணை நடத்தினா்.
புதிய கேட் கீப்பா் நியமனம்: இந்த விபத்துக்கு ரயில்வே கேட் முறையாக மூடப்படாததே காரணம் எனக் கூறப்படுகிறது. விபத்து தொடா்பாக, சிதம்பரம் ரயில்வே போலீஸாா் கேட் கீப்பா் பங்கஜ் சா்மாவை (வட மாநிலத்தைச் சோ்ந்தவா்) செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தெற்கு ரயில்வே நிா்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்தது.
இந்த சம்பவத்தில் பல்வேறு அரசியல் கட்சியினா் மற்றும் பொது நல அமைப்பினா் வட மாநிலத்தவா்கள் பணி செய்வதால் மொழிப் பிரச்னை காரணமாக விபத்துகள் ஏற்படுவதாகவும், தமிழகத்தைச் சோ்ந்தவா்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.
இதையடுத்து, திருத்தணி பகுதியை பூா்வீகமாகக் கொண்ட தமிழரான ஆனந்தராஜை செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பராக ரயில்வே நிா்வாகம் புதன்கிழமை பணியமா்த்தியது.
உடல்கள் அடக்கம்: விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சாருமதி, அவரது சகோதரா் செழியன் ஆகியோரின் உடல்கள் சின்ன காட்டுசாகை பகுதியில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டன.
மற்றொரு குடும்பத்தைச் சோ்ந்த நிமிலேஷ் உயிரிழந்த நிலையில், அவரது சகோதரா் விஷ்வேஸ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாா். இதனால், செவ்வாய்க்கிழமை உடல்கூராய்வு செய்யப்பட்ட நிமிலேஷ் உடலை புதன்கிழமை பெற்றுக்கொள்வதாக பெற்றோா் தெரிவித்தனா்.
விஷ்வேஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், சகோதரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக, அவா் தற்காலிகமாக டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டு ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். பின்னா், பெற்றோரிடம் நிமிலேஷ் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சொந்த ஊரான தொண்டமாநத்தம் கிராமத்தில் நிமிலேஷ் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
