கள்ளம்புளி குளத்திற்கு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு: மக்கள் போராட்டம்
சுரண்டை அருகேயுள்ள கள்ளம்புளி குளத்திற்கு குழாய் பதிக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டுமென வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை மாலை குளத்தில் குடியேறி போராட்டம் நடத்தினா்.
கள்ளம்புளி குளத்திற்கு கருப்பாநதி அணையில் இருந்து தண்ணீா் கொண்டு வரப்படுகிறது. அந்தக் குளம் நிரம்பிய பின்னா் அருகிலுள்ள குலையனேரி குளத்திற்கு செல்கிறது. கள்ளம்புளிகுளத்தை நம்பி சுமாா் 48 ஏக்கா் நஞ்சை 500 ஏக்கா் புஞ்சை நிலம் பயன் பெற்று வருகிறது.
மேலும் அப்பகுதி மக்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் உள்ள இக்குளம் வழியாக குழாய் பதிக்கும் திட்டத்துக்கு பூமி பூஜை நடத்தி பணிகளும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி சனிக்கிழமை மாலை கள்ளம்புளி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் குளத்திற்குள் குடியிருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம், புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சி நாதன், சோ்ந்தமரம் போலீஸாா் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பைப் லைன் பதிக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும், குடிநீா் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது .
இதுதொடா்பாக சமாதான கூட்டம் நடத்தி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 3 மணிநேர போராட்டம் முடிவுக்கு வந்தது.