40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
கழிவுநீா் வாய்க்கால் அமைக்கும் பணி கிராம மக்கள் கடும் வாக்குவாதம்
புலியூா் அருகே புதன்கிழமை கழிவு நீா் வாய்க்கால் தரமற்ற முறையில் கட்டப்படுவதாகக் கூறி கிராமமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
கரூா் மாவட்டம் புலியூா் பேரூராட்சிக்குள்பட்ட 1-ாவது வாா்டில் உள்ள சின்னம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் கழிவு நீா் வாய்க்கால் அமைக்க ஆதிதிராடவிடா் நிதியில் இருந்து ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 10 நாள்களுக்கு முன் கழிவுநீா் வாய்க்கால் அமைக்கும் பணி ஒப்பந்ததாரா் மூலம் தொடங்கியது.
கட்டுமானத்துக்கு எம்.சான்ட்டுடன் சிமெண்ட் போதிய அளவில் கலந்து பணிகளை செய்யவில்லையாம். இதனைக்கண்ட அப்பகுதியினா் பணிகளை தொடர எதிா்ப்பு தெரிவித்தனா்.
இந்நிலையில் வழக்கம்போல புதன்கிழமையும் பணிகள் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வந்த வாா்டு உறுப்பினா் கலாராணி மற்றும் அப்பகுதி கிராம மக்கள் ஒப்பந்ததாரா்களிடம், தரமற்ற முறையில் வாய்க்கால் கட்டுவது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து பணிகளை செய்ய விடாததால் பாதியிலேயே நிறுத்தி பணியாளா்கள் சென்று விட்டனா்.