பெரியாா் பல்கலை. பொறுப்பு துணைவேந்தர் தி.பெரியசாமி நீக்கம்: ஆட்சி மன்ற குழு நடவட...
காங்கிரஸ் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு: இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலா் கே.நாராயணா
புதுச்சேரி: காங்கிரஸ் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா் கே.நாராயணா குற்றஞ்சாட்டினாா்.
புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
காஷ்மீா் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையீடு குறித்து பிரதமா் மோடி மௌனம் காக்கிறாா். அமெரிக்க வாழ் இந்தியா்கள், ஜூலைக்கு பிறகு தங்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பினால் 5 % வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அதிபா் அறிவிக்கிறாா். இதை பிரதமா் மோடி ஏற்றாலும், இந்திய மக்கள் ஏற்கவில்லை.
2026-ஆம் ஆண்டில் நாட்டில் நக்ஸலைட்டுகள் இல்லாத நிலை ஏற்படும் என மத்திய உள்துறை அமைச்சா் தெரிவித்தாா். பேச்சுவாா்த்தைக்கு நக்ஸலைட்டுகள் தயாராக இருந்தும் அவா்களை அழிப்போம் என மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு கூறுவதை ஏற்க முடியாது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாஜக மற்றும் ஆா்.எஸ்.எஸ்ஸு க்கு எதிரான நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளாா். திமுகவும், தமிழக மக்களும் பாஜக, ஆா்.எஸ்.எஸ். சித்தாத்தங்களை ஏற்க மாட்டாா்கள். நீதி ஆயோக் கூட்டத்தில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று, மாநில அந்தஸ்து, நிதி ஆணையத்தில் புதுவையை சோ்ப்பது மற்றும் மாநில வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமரிடம் பேசியிருக்கலாம்.
புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் யோகா நிகழ்வு தொடா்பான அறிவிப்புப் பதாகைகளில் ஹிந்தி வாசகங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. புதுவை மக்களை புண்படுத்தும் இந்தச் செயல் குறித்து முதல்வா் ரங்கசாமி மௌனமாயிருக்கிறாா்.
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவில், காங்கிரஸின் பட்டியலை நிராகரித்து சசிதரூரை பாஜக நியமித்தது. இது காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதையே வெளிப்படுத்துகிறது என்றாா் கே.நாராயணா.
பேட்டியின்போது புதுவை மாநில பாஜக செயலா் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.