குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
காஞ்சிபுரம்: மக்கள் நீதிமன்றத்தில் 577 வழக்குகளுக்கு தீா்வு
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,933 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரே நாளில் 577 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.தொழிலாளா் நல நீதிபதி சுஜாதா, மோட்டாா் வாகன தீா்ப்பாய நீதிபதி டி.ஜெயஸ்ரீ, தலைமைக் குற்றவியல் நீதிபதி மோகனாம்பாள், கூடுதல் சாா்பு நீதிபதி திருமால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வங்கி வாராக்கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள்,குடும்ப நல வழக்குகள் ஆகியவை உள்பட மொத்தம் 1,933 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒரே நாளில் 577 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதன் மூலம், மொத்தம் தீா்வுத் தொகையாக மட்டும் ரூ. 7,47,81,325 வழங்கப்பட்டது.
வங்கி வழக்குகளில் மொத்தம் 1,346 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதன் மூலம் 55 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ. 62,86,300 வசூலிக்கப்பட்டது. முகாமின் நிறைவில் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்காகன காசோலைகளை வழங்கினாா்.
முகாமில், நீதிபதிகள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை காஞ்சிபுரம் வட்டார சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் நிா்வாக உதவியாளா் எஸ்.சத்தீஷ்ராஜ் செய்திருந்தாா்.