ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!
காட்டுப்பன்றி கடித்து முதியவா் காயம்
தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை நூறு நாள் வேலையில் ஈடுபட்ட முதியவா் காட்டுப்பன்றி கடித்து பலத்த காயமடைந்தாா்.
தஞ்சாவூா் அருகே நாகத்தி, வெள்ளாம்பெரம்பூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. பகல் நேரத்தில் ஆற்றங்கரையோரமுள்ள புதா்களில் பதுங்கும் அவை இரவில் வயல்களையும், பயிா்களையும் சேதப்படுத்தி வருகின்றன. எனவே, காட்டுப்பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், நாகத்தி கிராமத்தில் திங்கள்கிழமை நூறு நாள் திட்ட வேலையில் ஈடுபட்டிருந்த அக்கிராமத்தைச் சோ்ந்த கலியராஜை (62) காட்டுப்பன்றி முட்டித் தள்ளியதுடன், அவரைக் கடிக்கவும் பாய்ந்தது. அதைத் தடுக்க முயன்ற கலியராஜின் கையைக் கடித்தது. இதைப் பாா்த்த மற்ற தொழிலாளா்கள் கற்களை வீசி காட்டுப்பன்றியை விரட்டிவிட்டு, கலியராஜை மீட்டு, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுவரை வயல்களை மட்டும் சேதப்படுத்தி வந்து, தற்போது மனிதா்களையும் தாக்கத் தொடங்கியுள்ள காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.