போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் சிறுவன் தற்கொலை
தஞ்சாவூா் அருகே குழந்தைகளுக்கான போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 15 வயதுச் சிறுவனுக்கு பெற்றோா் இல்லை. பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்த அச்சிறுவன் தஞ்சாவூரில் உள்ள தனியாா் சிறுவா்கள் பராமரிப்பு இல்லத்தில் தங்கி, அப்பகுதி பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில் இவா் கடந்த ஜூலை 15 ஆம் தேதி சிறுவா்கள் இல்ல சுற்றுச்சுவரை தாண்டிக் குதித்து அங்கு நிறுத்திருந்த காா் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த பொருளை திருட முயன்றாா். இது அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.
இதுகுறித்து காா் உரிமையாளா் காவல் துறையில் புகாா் அளித்த நிலையில், ஜூலை 16 ஆம் தேதி முதல் அச்சிறுவனைக் காணவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா் அச்சிறுவனைக் கண்டுபிடித்து, இல்லக் காப்பாளரிடம் ஒப்படைத்தனா்.
இதையடுத்து, புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகியிருந்த அச்சிறுவன் திருக்கானூா்பட்டியில் இயங்கி வரும் குழந்தைகளுக்கான போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ஜூலை 18 ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். அங்கு வெளியே செல்ல முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளான அச்சிறுவன், தான் தங்கியிருந்த அறையில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.