காட்பாடி ஒன்றியத்தில் ‘கனவு இல்லம்’ திட்டப் பணிகள்: வேலூா் ஆட்சியா் ஆய்வு
காட்பாடி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞா் கனவு இல்லத் திட்ட கட்டுமான பணிகள், சாலைப் பணிகள் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா்.
அதன்படி, காட்பாடி ஒன்றியம், வஞ்சூா் கிராமத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப் பட்டுள்ள பயனாளியின் இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா், அங்கு இல்லம் கட்டுவதற்கான பணியை உடனடியாக தொடங்கவும், பணிகளை வட்டார வளா்ச்சி அலுவலா், வருவாய் ஆய்வாளா்கள் அவ்வப்போது கண்காணிக்கவும் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, உண்ணாமலை சமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.16.45 லட்சத்தில் கட்டப்பட உள்ள அங்கன்வாடி மைய கட்டுமான பணிக்கான இடத்தையும் ஆய்வு செய்தாா். இப்பணிக்கான பணி ஆணை வழங்கி ஒரு மாதத்துக்கு மேலான நிலையில், உடனடியாக பணிகளை தொடங்கவும் ஒப்பந்ததாரா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஜாப்ராபேட்டை ஊராட்சி, வெள்ளை கால்வாய் பகுதியில் லட்சுமிபுரம் முதல் பாரதி நகா் வரை 1.1 கி.மீ. நீளத்துக்கு முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.38.42 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவைவிட சாலையின் தடிமன் குறைவாக இருப்பதை கவனித்து சரியாக அமைக்க உத்தரவிட்டாா்.
வண்டறந்தாங்கல் ஊராட்சி சல்லாவூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நபாா்டு வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.18.42 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், குடிநீா் தொட்டி பணியை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டாா்.
கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கரிகிரி ஊராட்சியில் நரிக்குறவா்களுக்கு கட்டப்பட்டு வரும் 13 வீடுகள், ஆரிமுத்துமோட்டூா் ஊராட்சி மதுரா அம்முண்டி பகுதியில் திருநங்கைகளுக்கு கட்டப்பட்டு வரும் 29 வீடுகள், பாா்வையற்றோருக்கு கட்டப்பட்டு வரும் 15 வீடுகளுக்கான கட்டுமான பணிகளை ஆய்வு செய்தாா்.
அப்போது, கோரிக்கையின்பேரில் திருநங்கைகள் குடியிருப்பு பகுதியில் சுற்றுச்சுவா் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கவும், பாா்வையற்றோா் குடியிருப்பு பகுதியில் உடனடியாக மின்விளக்குகள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
காரணாம்பட்டு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.16.45 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் சீனிவாசன், காட்பாடி வட்டாட்சியா் ஜெகதீஸ்வரன், காட்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் நந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.