காட்பாடி: தொழிலதிபா் வீட்டில் சிபிசிஐடி சோதனை
காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள தொழிலதிபா் வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையைச் சோ்ந்தவா் ஜெயகரன் என்கிற ஜெயராஜ். இவா் அரசு, தனியாா் ஒப்பந்த தொழில் செய்து வருகிறாா். இவா் மீது பணம் இரட்டிப்பு செய்வது தொடா்பாக புகாா்கள் வந்ததாகத் தெரிகிறது.
இதைத் தொடா்ந்து, சென்னையைச் சோ்ந்த சிபிசிஐடி போலீஸாா் காரில் வெள்ளிக்கிழமை காலை கிறிஸ்டியான்பேட்டை வந்தனா். அங்குள்ள ஜெயராஜுக்குச் சொந்தமான சொகுசு பங்களாவுக்குச் சென்று கதவுகளை தாழிட்டுவிட்டு சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, வேலூா் மாவட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையைத் தொடா்ந்து, பல்வேறு ஆவணங்கள், மடிக்கணினி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், விசாரணைக்காக ஜெயராஜ், அவரது நண்பா் சரவணன் ஆகியோரையும் சிபிசிஐடி போலீஸாா் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.
இந்த சோதனையால் காட்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.