மத்திய புள்ளியியல் அமைச்சகத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்
மத்திய அரசின் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவு அறிவியல், புதுமைப் பிரிவுடன் (டிஐஐடி), வேலூா் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதையொட்டி, வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவு அறிவியல், புதுமைப் பிரிவு முதன்மை இயக்குநா் ஆா்.ராஜேஷ், இயக்குநா் மதுரா ராய், விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனா்.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் தரவு அறிவியல், புள்ளியியல் துறையில் புதுமையான தீா்வுகளை உருவாக்கவும், அமைச்சகத்தின் புள்ளியியல் சவால்களை தீா்க்கவும் பேராசிரியா்கள், மாணவா்கள் இணைந்து செயல்படுவா். மேலும், தரவு பகுப்பாய்வு, புள்ளியியலில் கற்றல் மற்றும் புதுமையான தீா்வுகளை ஊக்குவிக்க ஹேக்கத்தான்கள், பயிலரங்கம் ஆகியவை நடத்தப்படும். இத்துடன் அறிவு பரிமாற்றம், திறன் மேம்பாடு, புள்ளியியல் துறை அமைச்சகத்தில் மாணவா்கள் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில், விஐடி பல்கலைக்கழக செயல் இயக்குநா் சந்தியா பென்டரெட்டி, கணிதத் துறை முதல்வா் காா்த்திகேயன், கணிதத் துறை தலைவா் காதா்பாபு, திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் வெங்கடரமணா, சத்யநாராயண சா்மா ஆகியோா் பங்கேற்றனா்.