3 கிலோ சந்தனக் கடைகள் கடத்தல்: இளைஞா் கைது
ஒடுகத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் சந்தனக் கட்டைகளை கடத்திய இளைஞரை வனத் துறையினா் கைது செய்து ரூ. 35,000 அபராதம் விதித்தனா்.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த பீஞ்சமந்தை வனப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தனக் கட்டைகளை கடத்துவதாக மாவட்ட வன அலுவலா் அசோக்குமாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஒடுகத்தூா் வனவா்கள் பழனி, துளசிராமன், சுகுமாா், வனக் காப்பாளா் குழுவினா் பீஞ்சமந்தை வனப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி, அவரது வாகனத்தில் இருந்த மூட்டையை சோதனை செய்தனா். அதில், சுமாா் 3 கிலோ எடையுள்ள சந்தனக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது. தொடா்ந்து, அவரை வனத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், அவா் மேல்அரசம்பட்டு அருகே உள்ள முள்ளுவாடி கிராமத்தைச் சோ்ந்த மோகன்ராஜ் (30) என்பது தெரியவந்தது.
வனத் துறையினா் இருசக்கர வாகனத்துடன் சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து மோகன்ராஜை கைது செய்தனா். அவருக்கு ரூ. 35,000 அபராதமும் விதித்தனா். மேலும், அவா் சந்தன கட்டைகளை யாருக்கு கடத்தினாா், இந்த சம்பவத்தில் யாா் யாருக்கு தொடா்புள்ளது என்பது குறித்தும் வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.