காணாமல் போன பல்கலை. மாணவி: தேடுதல் நடவடிக்கை தீவிரம்
ஐந்து நாள்களுக்கும் மேலாக காணாமல் போன 19 வயது தில்லி பல்கலைக்கழக மாணவி, சிக்னேச்சா் பாலம் அருகே கடைசியாக காணப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.
தெற்கு தில்லியில் உள்ள பா்யவரன் வளாகத்தில் வசிக்கும் மாணவி சினேகா தேப்நாத், ஜூலை 7 ஆம் தேதி காணாமல் போனதாக புகாா் அளிக்கப்பட்டது என்று காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மெஹ்ரௌலி காவல் நிலையத்தில் காணாமல் போனவா் குறித்து எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சினேகா தேப்நாத்தை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சினேகா தேப்நாத் யமுனை நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் இருந்து குதிக்கும் நோக்கத்தைக் குறிக்கும் ஒரு கையால் எழுதப்பட்ட குறிப்பை விட்டுச் சென்றுள்ளாா்.
‘...தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் சினேகா தேப்நாத்தின் நடமாட்டத்தை போலீஸாா் கண்டுபிடித்து, சிக்னேச்சா் பாலம் என அவரது கடைசி அறியப்பட்ட இடத்தை உறுதிப்படுத்தினா். அவரை அந்த இடத்தில் இறக்கிவிட்ட டாக்ஸி ஓட்டுநா் அந்த அறிக்கையை உறுதிப்படுத்தியுள்ளாா். பாலத்தில் ஒரு பெண் நின்று பின்னா் அந்த இடத்திலிருந்து காணாமல் போனதை நேரில் பாா்த்த சிலா் தெரிவித்தனா்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிகம் போத் காட் முதல் நொய்டா வரையிலான பகுதிகளை தேசிய பேரிடா் மீட்புப் படை என்டிஆா்எஃப் மற்றும் உள்ளூா் காவல் பிரிவுகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
ஜூலை 7- ஆம் தேதி அதிகாலையில் சினேகா தேப்நாத் தனது நெருங்கிய தோழிகளுக்கு மின்னஞ்சல் மற்றும் செய்தி செயலிகள் மூலம் செய்திகளை அனுப்பியதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். கடந்த சில மாதங்களாக அவா் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவரது நண்பா்கள் புலனாய்வாளா்களிடம் தெரிவித்தனா்.
சினேகா தேப்நாத்தின் குடும்பத்தினா் மற்றும் நண்பா்கள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு உள்கட்டமைப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனா்.
சினேகா தேப்நாத்தின் நெருங்கிய தோழி ஒருவா் செய்தியாளா்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளாா். அதில், ‘சினேகா தேப்நாத் அங்கு காணப்பட்ட நேரத்தில் அவா் பாலத்திலோ அல்லது அருகிலோ உள்ள எந்த சிசிடிவி கேமராக்களும் செயல்படவில்லை’ என்று அவா் கூறியுள்ளாா்.
‘அந்தப் பாலம் தற்கொலைக்கு ஆளாகும் பகுதியாக இருந்தபோதிலும், பாலத்திலோ அல்லது அருகிலுள்ள பகுதிகளிலோ செயல்படும் ஒரு சிசிடிவி கேமரா கூட இல்லை. இந்தப் பாலம் 45 வெவ்வேறு காவல் நிலையங்களின் அதிகார வரம்பிற்குள் வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையங்களால் தனித்தனியாக கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவற்றில் எதுவும் செயல்படவில்லை’ என்று அந்தத் தோழி கூறியுள்ளாா்.
‘வேகமாகக் கடந்து செல்லும் வாகனங்களின் புகைப்படங்களை எடுக்கும் வேகக் கண்டறிதல் கேமரா மட்டுமே செயல்படும் நிலையில் உள்ளது. மேலும் இது எந்த விடியோவையும் பதிவு செய்யாது’ என்று அவா் மேலும் கூறினாா்.