காமநாயக்கன்பட்டி பேராலய விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலயத்தின் விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
வீரமாமுனிவா் பங்குகுருவாகப் பணியாற்றிய இப்பேராலயத்தில் விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றத்தையொட்டி புதன்கிழமை மாலை சுமாா் 6.45 மணிக்கு கோயில் முன்பு கொடிமரம் நடப்பட்டது. அதைத் தொடா்ந்து மிக்கேல் அதிதூதரின் திருவுருவப் பவனி நடைபெற்றது.
தொடா்ந்து, சிவகங்கை மறைமாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம் கொடியை ஆசீா்வதித்து, கொடிமரத்தில் முதலாவதாக திருத்தலக் கொடியையும், பின்னா், இறைமக்கள் கொண்டு வந்திருந்த வண்ணக் கொடியையும் அணிவகுப்பாக ஏற்றி வைத்தாா்.
அதைத் தொடா்ந்து, ஜவகா் நகா் பங்கு பணியாளா் சகாய ஜான், சிங்கம்பாறை பங்கு பணியாளா் அருள் நேசமணி, கல்லிடைக்குறிச்சி பங்கு பணியாளா் அருள் அந்தோணி ஆகியோா் திருப்பலி மற்றும் மறையுரை நிகழ்த்தினா். இதில், திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா். மாலையில் சமபந்தி விருந்து நடைபெற்றது.
4ஆம் திருநாளான ஆக.9 ஆம் தேதி காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடு , 5ஆம் திருநாளான ஆக. 10ஆம் தேதி காலை 8.30 மணிக்கு புது நன்மை விழா, 9ஆம் திருநாளான ஆக. 14ஆம் தேதி மாலை 6.30மணிக்கு ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.
10ஆம் திருநாளான ஆக. 15ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு மதுரை உயா் மறைமாவட்ட ஆயா் அந்தோனிசாமி சவரிமுத்து தலைமையில் தேரடித் திருப்பலியும், அதைத் தொடா்ந்து, கும்பிடு சேவையும் நடைபெறுகிறது. மாலையில் திருப்பலி, நற்கருணை பவனி நடைபெறும்.
ஏற்பாடுகளை பேராலய அதிபா் மற்றும் பங்குத் தந்தையுமான மோயீசன், உதவி பங்குத்தந்தை ஜே. நிரோ ஸ்டாலின், ஆன்மிக தந்தை வி. எஸ். அந்தோணி ராஜ் மற்றும் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி இறைமக்கள் செய்து வருகின்றனா்.

